சக பிரயாணி



அதிகாலை அவசரம் பேருந்தில்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்.
இடம் கிடைத்த மகிழ்ச்சியில்
உன்னருகில் அமர்கிறேன் நான்.

மையிட்ட கண்கள்.
மின்னிடும் சிறிய மூக்குத்தி.
அழகாக வாரி முடித்த கூந்தலில் கதம்பப் பூ.
பூப்போட்ட புடவை.
கலகலக்கும் கண்ணாடி வளையல்கள்.
கன்னத்தில் கையூன்றி வேடிக்கை
பார்த்துக்கொண்டு வருகிறாய் நீ.
என் தமிழ் மண்ணின் பெண்ணழகை ரசிக்கிறேன் நான்.

திடீரென ஒரு குரல் கல்லெறிகிறது,
நம் இருவரின் மௌனத்திலும்.
அந்த நடத்துனர் தான்!!!
உன்னைப் பார்த்து, "எங்கே தங்கியிருக்க?"
என்று அதிகாரமாய் கேட்க,
பதறிப் போய் உன்னைப் பார்க்கிறேன்.

நீயோ தயங்கி, மெதுவாய் திரும்பி பதில் சொல்கிறாய்.
... வார்த்தைகள் அல்ல.
உன் குரல் மட்டுமே என் செவி சேர்கிறது.
பெண்ணின் குரல் இல்லையே!!!
....
அப்படியென்றால், நீ . . . நீ. . . அ வ ள் இல்லையா?
அவளாகியிருக்கும் . . . அவனா?
அதிர்ந்து போகிறேன் நான்.

அடுத்தடுத்து கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது,

உன்னை நோக்கி,
ஒரு அஃறிணையிடம் பேசும் தொனியில்.
எந்த ஊரு? --- சேலம்.
சம்பாதிக்கிற காசையெல்லாம் இன்னா செய்வ? -- ஒரு பார்வை.
அம்மா அப்பா விரட்டி விட்டாங்களா? -- மெதுவாய் ஒரு தலையசைப்பு.
ஓடி வந்துட்டியா? -- மவுனம்
போய் பாக்கவேயில்லையா? -- . . .
இனி சேத்துக்க மாட்டாங்களா? -- . . .

ஐயோ... உன் விழியோரம் ஈரம் கசிந்து... சிந்தப் பார்க்கிறது!
இப்படி எத்தனை முறை குத்திக் கிழித்திருக்கும்
இந்த சமூகம் அதே இரணங்களை திரும்பத் திரும்ப.

ஒரே ஒரு முறை என்னை சந்திக்க துணிகிறது உன் கண்கள்.
அந்த ஒரு துளி பார்வையில்,
மெலிதாய் ஒரு ஏக்கம்,
மெல்லியதாய் ஒரு கோபம்,
கொஞ்சம் தவிப்பு, சிறிது விரக்தி எல்லாம் இருந்தது.

எனக்கு உன் விரல்களை பிடித்துக்
கொள்ள வேண்டும் போலிருந்தது கண்ணம்மா.
உன் வேதனை புரிகிறதெனக்கு என்று
சொல்ல வேண்டும் போலிருந்தது.

படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ? இல்லையே.
என் இறைவன் ஒரு போதும்
பிழை செய்வதில்லையே!!!

நான் ரசித்த உனது அந்த நளினம்
எத்தனை பெண்களிடம் இல்லை...

உனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,
எத்தனை ஆண்களிடம் இல்லை...

கண்ணீரை அடக்கிய உன் சக்தி,
சிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்
எத்தனை மனிதர்களிடம் இல்லை...
என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...

நிறுத்தம் வந்துவிட்டது.
இருவரும் இறங்குகிறோம்.
எதிரெதிர் திசையில் நடக்கிறோம்.
மனம் கனத்துப் போயிருக்கிறது.

நாள் முழுவதிலும் விழியோரத்தில்
ஒரு நீர்த்துளி உருண்டு கொண்டிருக்கிறது.
என்னைப் போலவே
கோழையாய்...

~.~. JC நித்யா ~.~.

19 comments:

விஜய் Mar 3, 2008, 12:39:00 PM  

மனிதநேயமிக்க வார்த்தைகள் மிதக்கிறது எங்கும்.

அருமை அருமை.

பிழை இறைவனின் படைபில் அல்ல நம் பார்வையில்....

உன் மனம் கனக்கச் செய்த காட்சி இங்கு கதை ஆனதால் என் மனமும் கனத்து விட்டது.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish Mar 3, 2008, 7:15:00 PM  

விழிகளிலிருந்து தப்பிச்செல்லும் நீர்துளிபோல் நாமும் சில நிகழ்வுகளிலிருந்து தப்பித்தான் செல்கிறோம் கோழையாய்!!

நிதர்சனங்கள் உங்களின் பதிவுகள்!
பிழை இறையினது அல்ல ஒளிதேட வழியறியா நம் இருளில்!!

Unknown Mar 5, 2008, 3:06:00 PM  

Nalla pathivu, alagiya varigal. Good Work. Keep it up

காஞ்சனை Mar 7, 2008, 8:27:00 PM  

என் மனதில் தோன்றியவைகளை அப்படியே சிறிதும் பாரம் குறையாமல் வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நித்யா. படித்ததும் விழியோரம் நீர்த்துளியொன்று அநாதையாய் நின்றது உண்மை.

ரசிகன் Mar 15, 2008, 7:30:00 AM  

// சகாரா said...

என் மனதில் தோன்றியவைகளை அப்படியே சிறிதும் பாரம் குறையாமல் வார்த்தைகளில் வடித்துள்ளீர்கள் நித்யா. படித்ததும் விழியோரம் நீர்த்துளியொன்று அநாதையாய் நின்றது உண்மை.//

வழிமொழிகிறேன்:)

JC Nithya Mar 17, 2008, 10:57:00 AM  

விஜய்,Sathish, Srilakshmi, சகாரா, ரசிகன்,

எனது வலியின் வாசனை நுகர்ந்த நெஞ்சங்களுக்கு என் நன்றிகள்!!

Pradeep Mar 31, 2008, 8:53:00 AM  

ஒரு நிகழ்வு அதன் தாக்கத்தை நம்முள் சில நிமிடங்களாவது நம்மில் விட்டு செல்லும் .அதனை உங்களில் உணர்கிறேன்.வாழ்த்துக்கள்

Divya Apr 2, 2008, 5:20:00 AM  

நிதர்சனமான உண்மையை அழகான வார்த்தைகளால் அற்புதமாக கோர்த்திருக்கிறீர்கள்,

மனம் கணமானது:)

Divya Apr 2, 2008, 5:20:00 AM  

\\படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ? இல்லையே.
என் இறைவன் ஒரு போதும் பிழை செய்வதில்லையே!!!

நான் ரசித்த உனது அந்த நளினம்
எத்தனை பெண்களிடம் இல்லை...

உனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,
எத்தனை ஆண்களிடம் இல்லை...

கண்ணீரை அடக்கிய உன் சக்தி,
சிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்
எத்தனை மனிதர்களிடம் இல்லை...
என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...\


இவ்வரிகளை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டியது......

JC Nithya Apr 2, 2008, 8:14:00 PM  

மகிழ்ச்சி Pradeep. நன்றி !

மனத்தின் கனத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி Divya!!!

Vinod May 16, 2008, 7:26:00 PM  

There was a saint who worships God daily.He used to carry water to do his offering by having two pots tied to a single stick.After bringing water he plucks all the flowers and does the prayer or pooja.One of the pot do have a hole and by the time he reach his hut it will always be half filled .One day the pot getting ashamed of himself that it was not able to help him asked the Saint why god has created him with a hole.The saint replied have the pot ever noticed that the flower plants always flourish towards the side that he carries the pot with the hole.It said yes.Then the saint said though god gave the pot a hole he did it for a purpose else he won't have flowers to offer him.

JC Nithya May 23, 2008, 7:09:00 PM  

True Vinod, God never makes a mistake.

Thanks for your comment.

ஜியா Aug 14, 2008, 9:14:00 PM  

Chanceless Nithya.. kalakitteenga :))

JC Nithya Aug 19, 2008, 12:27:00 PM  

நன்றி ஜி!

Unknown Sep 12, 2008, 4:03:00 PM  

mmhmmm!

ArunB.Prakash Nov 5, 2008, 5:19:00 PM  

awesome....

JC Nithya Nov 6, 2008, 1:56:00 PM  

Thank you Arun Prakash!

Sublime Remembrance Mar 24, 2009, 5:50:00 AM  

wonderful! there is so much humanity in your words ! what more can anyone ask for in a poem...

JC Nithya Apr 15, 2009, 7:37:00 PM  

Thank you dear Sublime Remembrance!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.