தாய் மண்





அநாதையாய் கிடந்த இந்த விதையை
உள்வாங்கி உயிர் தந்தது நீயல்லவா.

வாழ்வின் அத்தியாயம் துவங்கியதே
உன்னில் நான் பிறந்த அந்த கணத்தில் தான்.

இருளின் ஆழங்களில் உருக்குலைந்து
இரணங்களில் புதையுண்டிருந்த என்னை
மெல்ல மெல்ல தூக்கி விட்டதும்
முளைக்க சொல்லி ஊக்குவித்ததும்
காற்றோடு கலந்த ஈரம் போல
ஞாபகப்பசையாக ஒட்டியிருக்கிறதே
என் இலைகளில்.

உன்னுள் மூழ்கி மாசற்று வெளிவந்து
முளைவிட்டபோதுதான் முதன்முதலில்
விடியல்தரிசித்தது என் குறுந்தளிர்.


தன்னையே குழைத்து நேசம் நிறைத்து
நீ அனுப்பிய நீர் தானே இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது என் நரம்புகளில்
பச்சைக் குருதியென.

மறதியின் பூமியில்
நிறமிழந்து நிற்கையில்
நீரூட்டிய உன் மீது தான்
மலர்களும் கனிகளும்
ஏன், சருகுகளும் கூட
உதிர்த்திட ஆசிப்பது
நியாயமில்லையா?

எங்கு பற்றி படர்ந்தால் என்ன
இன்னும் இன்னும் ஆழமாக
உன்னுள் இறங்கத்தானே
பிரியப்படுகின்றன என் வேர்கள்

சீதோஷ்ண நிலை
எத்தனை சிறப்பாய் இருந்தால் என்ன
உனை நீங்கினால்
செத்து போய் விடுமே என் செல்கள்

முளைத்து தழைத்த
மண்ணை விட்டு விலகி
வேறிடம் போக வேண்டுமா?
வாழ்ந்து திளைத்த
என் உலகம் சுருங்கி
சிறு தொட்டிக்குள் அடங்கிடுமா?

இடம் பெயர்தல் --
செடியின் வாழ்வில் மற்றுமொரு
நிகழ்வு அல்ல.
அழிவு.


வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே.


~.~. ஜெ. சி. நித்யா ~.~.


9 comments:

ரசிகன் May 13, 2008, 5:59:00 PM  

//
முளைத்து தழைத்த
மண்ணை விட்டு விலகி
வேறிடம் போக வேண்டுமா?
வாழ்ந்து திளைத்த
என் உலகம் சுருங்கி
சிறு தொட்டிக்குள் அடங்கிடுமா?

இடம் பெயர்தல் --
செடியின் வாழ்வில் மற்றுமொரு
நிகழ்வு அல்ல.
அழிவு.

வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே.//

உண்மைதான்.இடம் பெயர்ந்தவர்களைக் கேளுங்கள்,ஆழமான வலிகளை உணர்த்தும் வரிகள்.வாழ்த்துக்கள்:)

விஜய் May 15, 2008, 11:12:00 AM  

இக்கவிதை - இரு முகம் கொண்ட ஓர் அகம்.

அன்பின் வெளிப்பாடு அழகாக.

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish May 16, 2008, 5:54:00 AM  

மீண்டும் ஆழமான வரிகள்!!! அருமை :)

காஞ்சனை May 16, 2008, 12:40:00 PM  

//வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே. //

இந்தக் கடைசி வரிகள் ஏற்படுத்திய தாக்கம் என்றுமே மனதை விட்டு அகலாது. இந்த வரிகள் செடிக்கு மட்டும் அல்ல. மனிதமனத்திற்கும் தான். மனம் கனக்க வைத்துவிட்டீர்கள் தோழி.

JC Nithya May 16, 2008, 5:40:00 PM  

ரசிகன், விஜய், Sathish, சகாரா,

தவிக்கும் மனத்தின்
தாவர உணர்வுகளை
புரிந்து கொண்ட
உங்களுக்கு என் நன்றிகள்!!!

தினேஷ் May 27, 2008, 6:05:00 PM  

வேதனைகள் வேர்விட்டு நிலைத்து நிற்க்கின்றன இந்த கவிதையில்...

அருமை...

தினேஷ்

JC Nithya May 28, 2008, 2:16:00 PM  

நன்றி தினேஷ்!!!

ஜியா Aug 14, 2008, 9:07:00 PM  

Class...

JC Nithya Aug 19, 2008, 12:21:00 PM  

நன்றி ஜி!!!

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.