தினசரி வாழ்க்கையின்
சின்னஞ் சிறிய முடிவுகளுக்கும்
திணறி தவிக்கையில்
திசை காட்டும் வெளிச்சமாய்
நின் வார்த்தை
மனதை நிறைக்கிறது.
அகிலத்தையும் படைத்த
அதே வார்த்தை தான்
இந்த சிறியவளுக்காகவும்
இறங்கி வருகிறது.
இப்படி வாழ்தல் எத்தனை
பெரும்பாக்கியம்!
என்னுள்
நீக்கமற நிறைந்திருக்கும்
உன்னை நுகராமல்
என்னை அறிதல்
நெருங்கி வரும்
எவருக்கும் சாத்தியமில்லை.
நெஞ்சம் விம்மி எழுந்து
விழியில் நீராக கசியாமல்
ஒருபோதும் சொல்ல முடிந்ததே இல்லை
உன் மீதான எனதன்பை.
சுழல் காற்றில் சிக்குண்ட சருகைப்
போன்ற வாழ்க்கையில்
ஏதோ ஒரு சலனமற்ற நிசப்த கணத்தின்
நீட்சி நீ தான்.
சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
ஏதோ ஒரு சொல் என்னை மீண்டும் நிற்க செய்யுமெனில்
அது உன்னுடைய வார்த்தை தான்.
என்றாவது ஓர் நாள்
"இவள் மிகவும் நேசித்தாள்"
என சொல்லிவிடமாட்டாயா
என்றுதான் காத்திருக்கிறேன்
உயிர்வலி பொறுத்து.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
எங்கு நோக்கினும்
மனிதர்கள் இலைகளை போல் உதிர்கிறார்கள்.
காலம் யாருக்காகவும் நிற்காமல்
கோரமாய் சுழல்கிறது.
வாழ்க்கை துணையை பறிகொடுத்தவர்கள்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள்.
அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள்.
பரிதாபமாய் நிற்கிறார்கள்
வாழ்க்கை நதியருகில்.
நான்கு சுவர்களுக்குள்
முடங்கியிருக்கும் நாங்களோ
செய்வதறியாது திகைக்கிறோம்.
தேவனே
இரக்கம் காட்ட மாட்டீரா??
கண்ணெதிரில் என் மக்கள்
செத்து மடிகின்றனரே
தவறிழைத்தவனும்
அநீதி செய்தவனும்
அக்கறையற்ற சுயநலவாதிகளும்
தேசத்தை அழிக்க நினைத்தவர்களும்
நன்றாகத்தானே வேடிக்கை பார்க்கின்றனர்
அழிந்து மடிவதெல்லாம்
அப்பாவி ஜனங்கள்தானே.
என் தேவனே என் தேவனே
உம்மை நம்பாதவர்களுக்காகவும்
சேர்த்துதான் வேண்டுகிறேன்.
இந்த வாதையை
நிறுத்த மாட்டீரா.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Copyright © 2016 உயிரின் தேடல்...
Template design by: Raycreations.net, Ray Hosting
All pictures used in this blog except few are taken from the web.
Credits belong to the actual owners. Thanks.