சுவாசமாய் சூழ்ந்து
நினைவெங்கும் நிறைந்து
உலகமாய் விரிந்து
உயிரெங்கும் கலந்து
உதிரத்தையே உணவாக்கி தரும்
தாய்மையில் நனைந்து
உலகத்தினின்று முற்றிலும் துண்டிக்கப்பட்டு
கவலைக்கான காரணம் தொலைத்து
இனிமைகளை தவிர வேறேதும் அறியாது
தானென்ற நினைவு ஏதும் இல்லாது
தனது இருப்பை தவிர வேறெதையும் தெரிவிக்காது
இயல்பாய் இசைக்கும் மௌனத்தில் கரைந்து
தாயின் கருவறைக்குள்
சுகமாய் சுகமாய்
துயிலும் குழந்தை
போல
எனதினிய ஆலயமே,
உனக்குள் நான்
என்னை சிருஷ்டித்தவரை
நினைத்துக் கொண்டு...
~.~. JC நித்யா ~.~.

