அவரின் பார்வையில்...





அழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது.

அதே இரணம்! அதே வலி! எத்தனை முறை கேட்டாயிற்று இதே கேள்வியை... திரும்பத் திரும்ப... இன்னமும் பதிலில்லை. காயமும் ஆறவில்லையே...

எப்பொழுது ஏற்பட்டது இந்த காயம்?

பள்ளி நாட்கள் ! வருடந்தோறும அவளது பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.அந்த முறை, அவளின் வகுப்பு ஆசிரியை அவளை கூப்பிட்டு,
"மேரியாக நீ நடிக்கிறாயா?" என்று கேட்டார்கள். ஒரு நிமிடம், அவளுக்கு எங்கோ பறப்பது போல இருந்தது. "சரி டீச்சர்" என்று சந்தோஷமாய் சொன்னாள் . கிறிஸ்துமஸ் விழா நாடகத்தில் தான் மேரியாக நடிக்கப்போவதை தோழிகளிடமும வீட்டிலுள்ளவர்களிடமும சொல்லி சொல்லி பெருமைபட்டுக்கொண்டாள்.

அன்று ஒத்திகை நாள் ! அவள் அமர்ந்து தனக்கு முன் இருந்த வைக்கோல் மீது பாலகனாய் படுத்திருந்த இயேசு கிறிஸ்துவை தட்டிக் கொடுத்தபோது, அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி... அவள் முகத்தில் அத்தனை பரவசம்...

அப்பொழுது தான் அது நேரிட்டது! எங்கிருந்தோ ஒரு ஆசிரியை வேக வேகமாக வந்தார்கள். "இது என்ன? மேரியாக நடிப்பதற்கு இந்த பிள்ளையை போய் போட்டிருக்கீங்க? மேரின்னா அழகா இருக்க வேணாம்?"...

அவளின் சின்ன இதயத்தை குத்திக் கிழித்த வார்த்தைகள்! அதற்கு பின் நடந்தவை அவளை பெரிதாக பாதிக்கவில்லையெனினும் அந்தக் கேள்வி
அவளுக்குள் ஆறாத இரணமாய் பதிந்து விட்டது.

"நான்ன்கால்லை?" - இதுதான் அவளது நெஞ்சில் ஏற்பட்ட காயம்... அவளது வேதனை... வலி. அதன் பின்னர் அந்தக் காயத்தை யாராவது உரசிப்
பார்க்கும் போதெல்லாம் துடித்துப் போய் விடுவாள் அவள்...

"ச்சே... திரும்பத் திரும்ப அழுது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? " என்று நினைத்தவள் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். ஓவியம் வரைவதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது அவள் அந்த ஓவியத்தை முழுவதும் வரைந்து முடித்த போது... ஒரு ராஜஸ்தானிய பெண்ணை அப்படியே ஓவியமாக்கி இருந்தாள்... அவள் வரைந்தது அவளுக்கே ரொம்பப் பிடித்துப் போய் விட்டது.

"நான் இதுவரை வரைந்ததிலேயே இதுதான் பெஸ்ட்! ஜஸ்ட் பர்ஃபெக்ட்! " என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அந்த ஓவியத்தை தன் அறை சுவரில் ஒட்டியும் வைத்தாள்.

அன்று இரவு, அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அந்த ஓவியத்தை பார்த்து விட்டு, "இதென்ன? இவ்வளவு மோசமான ஒரு ட்ராயிங்!" "ரொம்ப நல்லாயிருக்குன்னு சுவரில் வேற ஒட்டி வைச்சிருக்கிறயாக்கும்? " "அந்த முகத்திற்கும் கண்ணிற்கும் பொருத்தமே இல்லை" "சுத்தமா நல்லாயில்ல..." என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.

அவள் திடுக்கிட்டு போனாள்... சிறிது நேரம் கழித்து, தனியாக இரவின் அமைதியில், விளக்கு வெளிச்சத்தில், தன் ஓவியத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள். எல்லா கோணங்களிலும் தள்ளி நின்று பார்த்தாள். அவளுக்கு அதில் ஒரு குறையும் இருப்பதாக தோன்றவில்லை. மாறாக, முன்பை விட இன்னும் அழகாக, இனிமையாகத் தெரிந்தது அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம்.

"என்ன மனுஷங்க இவுங்க... ரசனையே இல்லை... இவ்வளவு அழகா இருக்கிறதப் போய் 'நல்லாயில்லன்னு சொல்ல எப்படித்தான் இவங்களுக்கு மனசு வந்துச்சோ... என் கண்களுக்கு இந்த ஓவியம் எவ்வளவு அழகாக தெரிகிறது" என்று நினைத்தவளின் உள் ஆழத்திலிருந்து...
மெல்லிய குரல்... அவளின் பிரியமான ஜீசஸின் தெளிவான குரல்... "அப்படித்தான் மகளே, என் கண்ணில் நீயும் தெரிகிறாய்"... அவ்வளவு தான்! ஆயிரம் ரோஜா இதழ்களை மழையாய் பொழிந்தது போல் குளிர்ந்து போனது அவள் மனம்!

"இந்த மனிதர்களின்
மதிப்பீடுகளின்படியும்
அளவுகோல்களின்படியும்
நான் எப்படி இருந்தால்தான் என்ன?

சர்வ சிருஷ்டிக்கும் ஆண்டவராகிய
என் தெய்வத்தின் பார்வையில்,
என்னை உருவாக்கியவரின் பார்வையில்,
என் நேசரின் பார்வையில்
நான் காய் ருக்கிறேன்...
வேறென்ன வேண்டுமெனக்கு? ..."

மருந்திடப்பட்டுவிட்டது... அவளது இரணம் !

கிடைத்துவிட்டது... அவள் கேள்விக்கான பதில்!

"என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை."
( பைபிள்: உன்னதப்பாட்டு 4:7 )


~.~. ஜெ.சி.  நித்யா ~.~.


[ 'நல்ல நண்பன்' ஜூன் 2004 - மாத இதழில் வெளியிடப்பட்டது]

3 comments:

காஞ்சனை Nov 27, 2007, 8:07:00 PM  

அழகான கதைக்குள் அழுத்தமாய் ஒரு கீறல். என் இதயத்தில் வலி.
தழும்புகள் மட்டுமே சாட்சியாய்...

- சகாரா.

JC Nithya Nov 28, 2007, 4:30:00 PM  

அதே புள்ளியில் நின்று
அதே வலியை உணர்ந்த
இன்னொரு இதயத்தை சந்தித்த
மகிழ்ச்சி எனக்கு.

காஞ்சனை Dec 4, 2007, 8:39:00 PM  

நன்றி இதயமே! :-)

- சகாரா.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.