காத்திருப்பு...நீரில் நனைந்த வெற்றுத்தாளென
கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும்
ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு
நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான
உனது கவிதையை.


பூவின் இதழ் ஒன்றையும் சிதறடிக்காமல்
சுகமாய் நனைக்கும் செல்ல மழை போல
இதமாய் தூறுகிறாய் நாள்முழுவதும்
எனது கனவுகள் ஒன்றையும் பிய்த்திடாமல்.


கருவாகி உருவான விதையை
ஒரு நாளும் பார்த்திராத செடி போல
சந்திக்காமலேயே பிரிந்திருத்தலும்
பார்க்காமலேயே சேர்ந்திருத்தலும்
சாத்தியம் என்றாக்கிவிட்டு
புன்னகைக்கிறாய் சிறு பூவென.


விரிந்த அந்த வானத்தின் கிழிசல் வழியே
என்றாவதொருநாள் உன் முகம் தெரிந்திடும்
என்ற ஒரு சொட்டு நம்பிக்கையிலேயே
எரிந்து கொண்டிருக்கிறது


இந்த சின்னஞ்சிறு தீபம்
இன்னமும்...


~.~. JC நித்யா ~.~.

தாய் மண்

அநாதையாய் கிடந்த இந்த விதையை
உள்வாங்கி உயிர் தந்தது நீயல்லவா.

வாழ்வின் அத்தியாயம் துவங்கியதே
உன்னில் நான் பிறந்த அந்த கணத்தில் தான்.

இருளின் ஆழங்களில் உருக்குலைந்து
இரணங்களில் புதையுண்டிருந்த என்னை
மெல்ல மெல்ல தூக்கி விட்டதும்
முளைக்க சொல்லி ஊக்குவித்ததும்
காற்றோடு கலந்த ஈரம் போல
ஞாபகப்பசையாக ஒட்டியிருக்கிறதே
என் இலைகளில்.

உன்னுள் மூழ்கி மாசற்று வெளிவந்து
முளைவிட்டபோதுதான் முதன்முதலில்
விடியல்தரிசித்தது என் குறுந்தளிர்.


தன்னையே குழைத்து நேசம் நிறைத்து
நீ அனுப்பிய நீர் தானே இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது என் நரம்புகளில்
பச்சைக் குருதியென.

மறதியின் பூமியில்
நிறமிழந்து நிற்கையில்
நீரூட்டிய உன் மீது தான்
மலர்களும் கனிகளும்
ஏன், சருகுகளும் கூட
உதிர்த்திட ஆசிப்பது
நியாயமில்லையா?

எங்கு பற்றி படர்ந்தால் என்ன
இன்னும் இன்னும் ஆழமாக
உன்னுள் இறங்கத்தானே
பிரியப்படுகின்றன என் வேர்கள்

சீதோஷ்ண நிலை
எத்தனை சிறப்பாய் இருந்தால் என்ன
உனை நீங்கினால்
செத்து போய் விடுமே என் செல்கள்

முளைத்து தழைத்த
மண்ணை விட்டு விலகி
வேறிடம் போக வேண்டுமா?
வாழ்ந்து திளைத்த
என் உலகம் சுருங்கி
சிறு தொட்டிக்குள் அடங்கிடுமா?

இடம் பெயர்தல் --
செடியின் வாழ்வில் மற்றுமொரு
நிகழ்வு அல்ல.
அழிவு.


வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே.


~.~. ஜெ. சி. நித்யா ~.~.


இருக்கிறேன்...கண்ணாடி ஜன்னலின் வழியே
அவசர அவசரமாய் அள்ளி
பார்வைக்குள் நிரப்பி கொள்ளும்
வானத்தின் நீலம்

வர்ணமடித்த தொட்டிக்குள்
சிறைப்பட்ட செடியில்
புதிதாய் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய இலை

நுரைதள்ள பரிதாபமாய்
என்னை கடந்து செல்லும்
மாட்டின் அழகிய விழிகளில்
தீட்டிய கருமை

கை கழுவும் சாக்கில்
விரல்கள் அனுபவிக்கும்
மாசு நீக்கப்பட்ட
நீரின் குளிர்ச்சி

ருசியற்று உண்கையில்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்
அளவாய் கத்தரித்து
தட்டில் விரிக்கப்பட்ட
வாழை இலையின் மென்மை

தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை

மனம் வறண்ட ஒருபொழுதில்
மின்னஞ்சலில் வந்துவிழும்
மழலை மொட்டுகளின் கண்களில்
தெறிக்கும் நிஜம்

வெற்றுக் கூச்சல்களுக்கு நடுவே
மயிலிறகாய் மனசு கோதி
உயிர் வரை ஊடுருவும்
இனிய ராகம்

என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.~.~. JC நித்யா ~.~.

வழிபாடு
சுவாசமாய் சூழ்ந்து
நினைவெங்கும் நிறைந்து

உலகமாய் விரிந்து
உயிரெங்கும் கலந்து

உதிரத்தையே உணவாக்கி தரும்
தாய்மையில் நனைந்து

உலகத்தினின்று முற்றிலும் துண்டிக்கப்பட்டு
கவலைக்கான காரணம் தொலைத்து

இனிமைகளை தவிர வேறேதும் அறியாது
தானென்ற நினைவு ஏதும் இல்லாது

தனது இருப்பை தவிர வேறெதையும் தெரிவிக்காது
இயல்பாய் இசைக்கும் மௌனத்தில் கரைந்து

தாயின் கருவறைக்குள்
சுகமாய் சுகமாய்
துயிலும் குழந்தை
போல

எனதினிய ஆலயமே,
உனக்குள் நான்

என்னை சிருஷ்டித்தவரை
நினைத்துக் கொண்டு...

~.~. JC நித்யா ~.~. 

சக பிரயாணிஅதிகாலை அவசரம் பேருந்தில்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்.
இடம் கிடைத்த மகிழ்ச்சியில்
உன்னருகில் அமர்கிறேன் நான்.

மையிட்ட கண்கள்.
மின்னிடும் சிறிய மூக்குத்தி.
அழகாக வாரி முடித்த கூந்தலில் கதம்பப் பூ.
பூப்போட்ட புடவை.
கலகலக்கும் கண்ணாடி வளையல்கள்.
கன்னத்தில் கையூன்றி வேடிக்கை
பார்த்துக்கொண்டு வருகிறாய் நீ.
என் தமிழ் மண்ணின் பெண்ணழகை ரசிக்கிறேன் நான்.

திடீரென ஒரு குரல் கல்லெறிகிறது,
நம் இருவரின் மௌனத்திலும்.
அந்த நடத்துனர் தான்!!!
உன்னைப் பார்த்து, "எங்கே தங்கியிருக்க?"
என்று அதிகாரமாய் கேட்க,
பதறிப் போய் உன்னைப் பார்க்கிறேன்.

நீயோ தயங்கி, மெதுவாய் திரும்பி பதில் சொல்கிறாய்.
... வார்த்தைகள் அல்ல.
உன் குரல் மட்டுமே என் செவி சேர்கிறது.
பெண்ணின் குரல் இல்லையே!!!
....
அப்படியென்றால், நீ . . . நீ. . . அ வ ள் இல்லையா?
அவளாகியிருக்கும் . . . அவனா?
அதிர்ந்து போகிறேன் நான்.

அடுத்தடுத்து கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது,

உன்னை நோக்கி,
ஒரு அஃறிணையிடம் பேசும் தொனியில்.
எந்த ஊரு? --- சேலம்.
சம்பாதிக்கிற காசையெல்லாம் இன்னா செய்வ? -- ஒரு பார்வை.
அம்மா அப்பா விரட்டி விட்டாங்களா? -- மெதுவாய் ஒரு தலையசைப்பு.
ஓடி வந்துட்டியா? -- மவுனம்
போய் பாக்கவேயில்லையா? -- . . .
இனி சேத்துக்க மாட்டாங்களா? -- . . .

ஐயோ... உன் விழியோரம் ஈரம் கசிந்து... சிந்தப் பார்க்கிறது!
இப்படி எத்தனை முறை குத்திக் கிழித்திருக்கும்
இந்த சமூகம் அதே இரணங்களை திரும்பத் திரும்ப.

ஒரே ஒரு முறை என்னை சந்திக்க துணிகிறது உன் கண்கள்.
அந்த ஒரு துளி பார்வையில்,
மெலிதாய் ஒரு ஏக்கம்,
மெல்லியதாய் ஒரு கோபம்,
கொஞ்சம் தவிப்பு, சிறிது விரக்தி எல்லாம் இருந்தது.

எனக்கு உன் விரல்களை பிடித்துக்
கொள்ள வேண்டும் போலிருந்தது கண்ணம்மா.
உன் வேதனை புரிகிறதெனக்கு என்று
சொல்ல வேண்டும் போலிருந்தது.

படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ? இல்லையே.
என் இறைவன் ஒரு போதும்
பிழை செய்வதில்லையே!!!

நான் ரசித்த உனது அந்த நளினம்
எத்தனை பெண்களிடம் இல்லை...

உனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,
எத்தனை ஆண்களிடம் இல்லை...

கண்ணீரை அடக்கிய உன் சக்தி,
சிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்
எத்தனை மனிதர்களிடம் இல்லை...
என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...

நிறுத்தம் வந்துவிட்டது.
இருவரும் இறங்குகிறோம்.
எதிரெதிர் திசையில் நடக்கிறோம்.
மனம் கனத்துப் போயிருக்கிறது.

நாள் முழுவதிலும் விழியோரத்தில்
ஒரு நீர்த்துளி உருண்டு கொண்டிருக்கிறது.
என்னைப் போலவே
கோழையாய்...

~.~. JC நித்யா ~.~.

அஞ்சலி...20.2.2008
உதிரும் இலைகளின் மரணத்திற்காக
நிற்பதில்லை பூமியின் சுழற்சி.

நிகழ்ந்து மடியும் நிமிஷங்களின் மரணத்திற்காக
நிற்பதில்லை மனிதனின் செயல்கள்.

ஆனால்,
நான் நிற்கிறேன் இங்கு
உ. .தி. .ர். .ந். .த. . மலரே,
உனக்கு அஞ்சலி செலுத்த.

வாழ்ந்த நிமிஷங்களிலெல்லாம்

மகரந்தங்களால் வாசனை தூவி,

கூம்பியிருந்த மனங்களை மலர்த்தி,

நசுக்கியவருக்கும் நறுமணம் ஈந்து,


உன்னத பணி செய்கிறோம்
என்ற பெருமை சிறிதுமின்றி,

படைத்தவரின் நோக்கம்
பிறழாமல் நிறைவேற்றி,

மகிழ்ச்சியாய் மரித்தாயோ...
நறும் பூவே,

நீ ஒன்றும் மண்ணில் வீழ்ந்திடவில்லை
மற்றுமொரு சருகாய் மாறிவிட...

என்னைப் போலவே
உன்னை நேசிக்கும்
ஆயிரமாயிரம் மனங்களில்
விழுந்திருக்கிறாய் விதையாக.

மீண்டும் முளைத்திடுவாய்,
உனைப்போல் வாழும் ஆசையை
துளிர்க்கச் செய்வாய்,
என்றென்றுமாக வாழ்ந்திருப்பாய்,

வாடாத நினைவாக...


கசியும் விழிகளுடன்,
JC நித்யா.

"ஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது!"இந்த தொடர் ஓட்டத்தில் எழுத அழைத்த Sathish க்கு என் நன்றி!
எனது மொத்த பதிவுகளே 5 தானே Sathish!
இதில் எதை குறிப்பிடுவது? :)
ஏதோ ஒரு வலி நேரத்தில் எழுதப்பட்டது தான் ஒவ்வொன்றுமே.

எந்த தேடல் என்னை வாழச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை வளரச் செய்கிறதோ...

எந்த தேடல் என்னை எரியச் செய்கிறதோ
எந்த தேடல் என்னை எரித்துக் கொண்டிருக்கிறதோ...

எந்த தேடல் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கியதோ
எந்த தேடலில் நான் முற்றிலும் தொலைந்து போகிறேனோ...

அதைப் பற்றி எழுதியதே நான் நேசிக்கும் ஒன்று.

இந்த தேடல் தான் என் சுகம்.
இந்த சுகம் தான் என் வலி.
இதுவே நான்.

கை நீட்டும் குழந்தையை
பிடித்துக் கொள்ளும் தாயின் விரல்கள்...

துவண்டு நிற்கும் கன்றுக்குட்டியைத்
தடவி கொடுக்கும் தாய்ப் பசு...

புழுதிச் சாலையில் செல்லும் பேருந்திற்குள்
ஒரு சில நிமிடங்கள் வந்து சென்ற வண்ணத்துப்பூச்சி...

சரிவிகிதத்தில் ஈரமும் இதமும் கலந்து
சில்லென்று முகத்தில் மோதிச் செல்லும் காற்று...

கவனிக்க யாருமில்லை எனினும்
ஆனந்தமாய் புன்னகைக்கும் காட்டுப் பூக்கள்...

நேற்று பெய்த மழையில் குளித்ததினால்
மகிழ்ச்சியோடு சிரித்திருக்கும் இலைகள்...

இப்படி எதெதிலோ
.உ.ன்.னை.
தேடிக் கொண்டிருக்கும்
நான்...Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.