சாதிகா என்றொரு தேவதை...
அழகான இளம் மாலை
தோழியின் குழந்தைக்கு
பிறந்த நாள் விழா..
வண்ணக்காகிதம் சுற்றிய
பரிசுப்பொருளோடு
நுழைகிறேன்..

நண்பர்கள்..சிரிப்பு..
ஆடைகள்..அலங்காரம்..
நலம் விசாரிப்புகள்..
அர்த்தமற்ற மொழியாடல்கள்..
ஒவ்வொன்றாய்
கடந்து பயணித்த  என் கவனம்
உன்மீது பட்டதும்
உறைந்து நிற்கிறது.

நிஜம் ததும்பும் உனது விழிகள்.
நட்சத்திரமென மின்னும் பார்வை.
எந்த முகப்பூச்சும் தேவைப்படாத
பூமுகம்.

எந்த பாகுபாடும் இன்றி எல்லாருக்கும்
வாரி வழங்கிடும்  சிரிப்பு..
எல்லாவற்றிற்கும் கை தட்டும்
உன் உற்சாகம்...
கொள்ளை கொள்கிறது என்னை.

இமைக்காமல் நோக்கும் எனை கண்டதும்
திடீரென சிலிர்த்து  விரிகிறது
தேவதை புன்னகை...

தோழியின் முதல் குழந்தை
பெண் என்று மட்டுமே
அறிந்திருந்தேன்.
இன்று  தான் புரிகிறது
தேவதை என்று.

அள்ளி எடுத்து கொஞ்சிட
ஆசை பிறக்கிறது.

எல்லாரையும் போல்
என்னையும் நினைத்திடுவாயோ
என அஞ்சி கை அசைத்து
விடை பெறுகிறேன் .
ஒரு இனிய அனுபவத்தின்
நிறைவோடு.

மனத்தின் ஈரமும்
தூய்மையும்
சிறிதும் உலராமல்
இருக்கும்
குட்டி தேவதையே,

நீ அல்ல..

வசதிக்கேற்றவாறு
நிமிடத்திற்கொருதரம்
நிறம் மாறும்
நாங்கள் தான்
ஊனமுற்றவர்கள்.


~.~. JC நித்யா ~.~.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.