இரட்சகர்




புயல் காற்று.
கொந்தளிக்கும் கடல்.
முரட்டு அலைகள்.
அஞ்சிடும் நெஞ்சம்.

படகு உடைந்திடுமோ
நீச்சல் பழக்கமில்லையே

தப்பிப் பிழைத்திடுவேனா
எந்த கரையில் ஒதுங்கிடுவேனோ

ஏற்றுக் கொள்ளப் படுவேனா
எனதடையாளம் தொலைத்திடுவேனோ
குழம்பி அலைகிறது மனம்.

முற்றிலும் இருள் சூழ்ந்து
கடைசி சொட்டு நம்பிக்கையும் தீர்ந்து
திகைத்து நிற்கையில்
திடீரென ஒளி வெள்ளமென
வருகிறாய் நீ.

அகோர புயலின் நடுவிலும்
அமைதியாய் பூக்கிறது
உன் புன்னகை.
அன்பாய் அழைக்கிறது
உன் பார்வை.

என்ன நேர்ந்தது என்னுள்.
புரியவில்லை.
ஏன் இறங்குகிறேன் படகை விட்டு?
நடக்கத் துணிகிறேனா கடல் மேல்?

எல்லாம் உறைந்து போனது.
உன் முகத்தில் பதிந்த
என் பார்வை தவிர.

வேர்களை அதிரச் செய்த
அதே புயல்.
ஆழம் வரை அச்சுறுத்திய
அதே கடல்.
நம்பிக்கைகளை விழுங்கிய
அதே அலைகள்.

ஆனால்,
நடக்கிறேன் நான் !!!

எப்படி முடிகிறது?
சட்டென பார்வை விலக்கி
சூழ்நிலை பார்க்கிறேன்.
ஆழம் பார்க்கிறேன்.
என்னைப் பார்க்கிறேன்.
அவ்வளவு தான்,
மூழ்கத் துவங்குகிறேன்...

கொஞ்ச கொஞ்சமாய்
உள்ளிழுக்கிறது கடல்.
வேறேதும் செய்வதற்கில்லை.
உயிரின் ஆழத்திலிருந்து
கதறுகிறேன்
கா.ப்.பா.ற்.றி.ட. . . மா.ட்.டா.யா.?

அதே மலர் புன்னகையோடு
கேட்கிறாய்...
"ஏன் நம்பிக்கை இல்லாமல்
போயிற்று உனக்கு?"

கை நீட்டி பிடித்துக் கொள்கிறாய்
நடுங்கும் என் விரல்களை.

மெதுவாய் அமைதி கொள்கிறது
துடித்துக் கொண்டிருந்த எனதுயிர்.


எழுந்து விட்டேன்.

விடிந்து விட்டது.

~.~. JC நித்யா ~.~.

அறுந்த சிறகுகள்...




...என்ன இது?
கூட்டை கலைத்து
பறக்க பழக்கும்
தாயின் பயிற்சி முறையா?

மலர்களால் வேயப்பட்ட
இதமான இந்த கூட்டிலிருந்து...

சுகமான உனது சிறகுகளின்
அரவணைப்பிலிருந்து...

பசிக்கத் துவங்கும் முன்பே
உணவு ஊட்டும்
உனது அக்கறையிலிருந்து...

புதைந்திருந்த காயங்களைக் கூட
தேடித் தேடி மருந்திட்ட
உனது பரிவிலிருந்து...

விட்டு விலகி
எங்கு போகச் சொல்கிறாய்?

தனியாய் பறந்து திரிதலும்
தானாய் உணவு தேடலும்தான்
வளர்ச்சிக்கு அடையாளமென்கிறாய்.
அதிர்ந்து போகிறது மனம்.

இன்னும் சில காலம்
உனது சிறகுகளிலேயே
தூக்கி சுமந்திட மாட்டாயா?
ஏங்குகிறது நெஞ்சம்.

யிர் வர்த்த தாய்மையே,

க்கான எல்லாமும்
நீயாக இருக்கிறாயே.

தைட்டும் பிரித்து
டுத்துச் செல்து
"நான்" என்று பெரிட்டு ???

~.~. JC நித்யா ~.~.

அவரின் பார்வையில்...





அழகாய் அசையும அந்த இலைகளின் மேல் பார்வை பதித்திருந்த அவள் கண்களில் மெதுவாய் ஈரம் கசிந்தது.

அதே இரணம்! அதே வலி! எத்தனை முறை கேட்டாயிற்று இதே கேள்வியை... திரும்பத் திரும்ப... இன்னமும் பதிலில்லை. காயமும் ஆறவில்லையே...

எப்பொழுது ஏற்பட்டது இந்த காயம்?

பள்ளி நாட்கள் ! வருடந்தோறும அவளது பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்படும்.அந்த முறை, அவளின் வகுப்பு ஆசிரியை அவளை கூப்பிட்டு,
"மேரியாக நீ நடிக்கிறாயா?" என்று கேட்டார்கள். ஒரு நிமிடம், அவளுக்கு எங்கோ பறப்பது போல இருந்தது. "சரி டீச்சர்" என்று சந்தோஷமாய் சொன்னாள் . கிறிஸ்துமஸ் விழா நாடகத்தில் தான் மேரியாக நடிக்கப்போவதை தோழிகளிடமும வீட்டிலுள்ளவர்களிடமும சொல்லி சொல்லி பெருமைபட்டுக்கொண்டாள்.

அன்று ஒத்திகை நாள் ! அவள் அமர்ந்து தனக்கு முன் இருந்த வைக்கோல் மீது பாலகனாய் படுத்திருந்த இயேசு கிறிஸ்துவை தட்டிக் கொடுத்தபோது, அவளுக்குள் அத்தனை மகிழ்ச்சி... அவள் முகத்தில் அத்தனை பரவசம்...

அப்பொழுது தான் அது நேரிட்டது! எங்கிருந்தோ ஒரு ஆசிரியை வேக வேகமாக வந்தார்கள். "இது என்ன? மேரியாக நடிப்பதற்கு இந்த பிள்ளையை போய் போட்டிருக்கீங்க? மேரின்னா அழகா இருக்க வேணாம்?"...

அவளின் சின்ன இதயத்தை குத்திக் கிழித்த வார்த்தைகள்! அதற்கு பின் நடந்தவை அவளை பெரிதாக பாதிக்கவில்லையெனினும் அந்தக் கேள்வி
அவளுக்குள் ஆறாத இரணமாய் பதிந்து விட்டது.

"நான்ன்கால்லை?" - இதுதான் அவளது நெஞ்சில் ஏற்பட்ட காயம்... அவளது வேதனை... வலி. அதன் பின்னர் அந்தக் காயத்தை யாராவது உரசிப்
பார்க்கும் போதெல்லாம் துடித்துப் போய் விடுவாள் அவள்...

"ச்சே... திரும்பத் திரும்ப அழுது மட்டும் என்ன ஆகிவிடப் போகிறது? " என்று நினைத்தவள் காகிதத்தையும் பென்சிலையும் எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள். ஓவியம் வரைவதென்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். இரண்டரை மணி நேரம் கடந்திருந்தது அவள் அந்த ஓவியத்தை முழுவதும் வரைந்து முடித்த போது... ஒரு ராஜஸ்தானிய பெண்ணை அப்படியே ஓவியமாக்கி இருந்தாள்... அவள் வரைந்தது அவளுக்கே ரொம்பப் பிடித்துப் போய் விட்டது.

"நான் இதுவரை வரைந்ததிலேயே இதுதான் பெஸ்ட்! ஜஸ்ட் பர்ஃபெக்ட்! " என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள். அந்த ஓவியத்தை தன் அறை சுவரில் ஒட்டியும் வைத்தாள்.

அன்று இரவு, அவள் வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் அந்த ஓவியத்தை பார்த்து விட்டு, "இதென்ன? இவ்வளவு மோசமான ஒரு ட்ராயிங்!" "ரொம்ப நல்லாயிருக்குன்னு சுவரில் வேற ஒட்டி வைச்சிருக்கிறயாக்கும்? " "அந்த முகத்திற்கும் கண்ணிற்கும் பொருத்தமே இல்லை" "சுத்தமா நல்லாயில்ல..." என்று ஆளாளுக்கு ஒவ்வொன்று சொன்னார்கள்.

அவள் திடுக்கிட்டு போனாள்... சிறிது நேரம் கழித்து, தனியாக இரவின் அமைதியில், விளக்கு வெளிச்சத்தில், தன் ஓவியத்தை நன்றாக உற்றுப் பார்த்தாள். எல்லா கோணங்களிலும் தள்ளி நின்று பார்த்தாள். அவளுக்கு அதில் ஒரு குறையும் இருப்பதாக தோன்றவில்லை. மாறாக, முன்பை விட இன்னும் அழகாக, இனிமையாகத் தெரிந்தது அந்த ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம்.

"என்ன மனுஷங்க இவுங்க... ரசனையே இல்லை... இவ்வளவு அழகா இருக்கிறதப் போய் 'நல்லாயில்லன்னு சொல்ல எப்படித்தான் இவங்களுக்கு மனசு வந்துச்சோ... என் கண்களுக்கு இந்த ஓவியம் எவ்வளவு அழகாக தெரிகிறது" என்று நினைத்தவளின் உள் ஆழத்திலிருந்து...
மெல்லிய குரல்... அவளின் பிரியமான ஜீசஸின் தெளிவான குரல்... "அப்படித்தான் மகளே, என் கண்ணில் நீயும் தெரிகிறாய்"... அவ்வளவு தான்! ஆயிரம் ரோஜா இதழ்களை மழையாய் பொழிந்தது போல் குளிர்ந்து போனது அவள் மனம்!

"இந்த மனிதர்களின்
மதிப்பீடுகளின்படியும்
அளவுகோல்களின்படியும்
நான் எப்படி இருந்தால்தான் என்ன?

சர்வ சிருஷ்டிக்கும் ஆண்டவராகிய
என் தெய்வத்தின் பார்வையில்,
என்னை உருவாக்கியவரின் பார்வையில்,
என் நேசரின் பார்வையில்
நான் காய் ருக்கிறேன்...
வேறென்ன வேண்டுமெனக்கு? ..."

மருந்திடப்பட்டுவிட்டது... அவளது இரணம் !

கிடைத்துவிட்டது... அவள் கேள்விக்கான பதில்!

"என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை."
( பைபிள்: உன்னதப்பாட்டு 4:7 )


~.~. ஜெ.சி.  நித்யா ~.~.


[ 'நல்ல நண்பன்' ஜூன் 2004 - மாத இதழில் வெளியிடப்பட்டது]

வறட்சி பிரதேசம்

















கடும் பசியில் வயிறு எரிந்தாலும்

சுடும் மணலில் பிஞ்சு பாதங்கள் புண்ணாக
யாருக்காகவோ ஓடி ஓடி பிச்சையெடுக்கும்
அந்த சின்னஞ் சிறு குழந்தையை
நான் கண்டு கொள்ளாமல் நகரும் போது...

கல்லூரி கேண்டீனில்
குளிர் பானங்களை எடுத்து கொடுத்து விட்டு
எங்களையும் எங்கள் சுடிதார்களையும்
தாகத்தோடு பார்க்கும்
அந்த ஏழைச் சிறுமியின் பார்வையை
நான் நாசூக்காய் தவிர்க்க முற்படும் போது...

பேருந்து நிலைய வாசலில்
வீங்கிப் போய் விகாரமாயிருக்கும்
தனது கால்களை காண்பித்து
ஏதாவது கேட்கும்
அந்த மனிதனைப் பார்த்து
"அய்யோ பாவம்" என்று
நான் முகத்தை திருப்பிக் கொள்ளும் போது...

வெட்கப் படுகிறேன்.
சுகமாயிருக்கும் இந்த
எனது நிலை குறித்து.

வலியுணர்கிறேன்.
ஈரமற்ற இயந்திர வாழ்க்கையில்
வறட்சி பிரதேசமாய்
மாறிப் போன
எனது மனதை நினைத்து.

"பசியாயிருந்தேன்,
நீங்கள் எனக்கு போஜனங்கொடுக்கவில்லை.
தாகமாயிருந்தேன்,
நீங்கள் என் தாகத்தை தீர்க்கவில்லை.
வியாதியாயிருந்தேன்,
நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை.

மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு
நீங்கள் எதை செய்யாதிருந்தீர்களோ
அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள்."
( பைபிள்: மத்தேயு 25:42-45)


~.~.  ஜெ.சி.  நித்யா ~.~.



இதயத்தின் ஏக்கம்




முள்ளுக்கும் வலித்திருக்கும்
உம் தலையில் கிரீடமாக சூட்டப்பட்ட போது...

மரத்திற்கும் வலித்திருக்கும்
சிலுவையாக செய்யப்பட்டு நீர் சுமந்த போது...

நிலத்திற்கும் வலித்திருக்கும்
உம் பட்டு பாதம் தள்ளாடி நடந்த போது...



இரும்பும் உருகியிருக்கும்
ஆணியாக உம் மீது அறையப் பட்ட போது..


கல்லும் கசிந்திருக்கும்
உம் புனித இரத்தம் பட்டுத் தெறித்த போது....

கல்லறையும் அழுதிருக்கும்
உயிரற்று நீர் உள்ளே வைக்கப் பட்ட போது...

சிருஷ்டி மொத்தமும் துடித்திருக்கும்
நீர் அனுபவித்த பாடுகளை பார்த்த போது...

ஏன் மனிதனுக்கு மட்டும் இன்னும் புரியவில்லை
அத்தனை வலியும் அவனுக்காகத் தான் நீர் அனுபவித்தீர் என்று?


~.~. ஜெ.சி.  நித்யா ~.~.


[ 'துதி மலர்' செப்டம்பர் 2002 - மாத இதழில் வெளியிடப்பட்டது]

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.