வழிநெடுக வண்ண நட்சத்திரங்கள்..




19B குளிர்சாதனப் பேருந்து. 
அலுவலக களைப்பு.  
புன்னகை மறந்த முகங்கள். 
அநேகமாக அனைத்து பயணிகளும் மென்பொருள் வல்லுநர்கள்..
மௌனமே நாகரீகமென அமர்ந்திருக்கும் ஒரு மாலைப்பொழுது.

ஒரு நிறுத்தத்தில் சட்டென மூன்று சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைந்தது போல,  "ஐய் ..ஏசி பஸ்டா..."  என்றொரு சத்தம்,  ஒவ்வொரு இருக்கையாய் சென்று, தொட்டு தடவிப் பார்த்த  அந்த பிஞ்சு முகங்களில் அத்தனை மகிழ்ச்சி.. "இங்க பாருடி...ஸீட் பெல்ட்...." "விழாம இருக்கிறதுக்கு...."
"அம்மா...எனக்கு சாக்லேட் வேண்டாமா... ஏசி பஸ்-ல கூட்டிட்டு வந்தியே இதே போதும்."   

ஒரு சிறுவன் ஓடிச்சென்று நடத்துநரிடம் "தி.நகர் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அங்கிள்?" எனக் கேட்க, சட்டென சிரித்த அவரோ  "இன்னும் மூணு நாள் ஆகும்ப்பா" என்று சொல்ல...உடனே மூவரும் சேர்ந்து கைதட்ட...அமர்களப்பட்டது பேருந்து.


ஒரு உற்சாக தூறல்  அத்தனை பேரையும் நனைக்க, அழகானது  அன்றைய தினம் அந்த சின்னஞ்சிறு   பூக்களால்...

~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . 



வெயில் வழிந்தோடும் பேருந்தில்  
மனம் வறண்டதொரு பொழுதில் இலக்கற்று வெறித்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு பிஞ்சுவிரல் என்மீது பட சட்டென்று திரும்பினேன்.

 "அக்கா...என் பேரு அஃப்சல்...நான் 2-ம் வகுப்பு 'பி' செக் ஷன்-ல படிக்கிறேன். நீங்க என்ன படிக்கிறீங்க அக்கா?"... ஆயிரம் நட்சத்திரங்களை கூட்டி பிழிந்த அந்த கண்கள் பார்த்து திகைத்த என்னிடம் பதில் எதிர்பாராமல் "வரேன் க்கா..டாட்டா" என சொல்லிவிட்டு ஓடிப் போய் இறங்கி விட்டாய்

அஃப்சல்....ஏன் பேசினாய்? பல வருட பழக்கம் போல் எதற்கு சிரித்தாய்?

மனம் முழுக்க நனைத்து விட்ட மழையை எப்படி ஒரு நொடியில் பொழியச் செய்தாய்?

அந்த நாளுக்கான எனது தேவை உனது சத்திய புன்னகை தானென்பது உனக்கெப்படி தெரியும்?
 ...

இன்றும் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் கடக்கும் போதெல்லாம்  "அக்கா...எப்படி இருக்கீங்க" எனக்கேட்டுக்கொண்டு நீ வந்துவிட மாட்டாயா என்று தான் தேடுகிறேன் என் குட்டி மழைத்தூதனே...

~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ .


ஒவ்வொரு பயணமும் ஒரு அழகிய அனுபவம்...இந்த சின்னஞ் சிறிய நட்சத்திரங்களால். வாழ்வது எப்படி என்று குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள். மிக சுலபமாய்...

~.~. ஜெ.சி. நித்யா ~.~.

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.