Posted by
JC Nithya
Monday, February 20, 2012
காலச் சுவரில் ஓவியமாய் - என்றும்
கரையா நினைவிற் காவியமாய்
நீலக்கடலில் பேரலையாய் - மனம்
நீந்தித் தீராப் பெருவெளியாய்
கோல முகிலினில் மழைத்துளியாய் - சிறு
குத்து விளக்கினிற் சுடரொளியாய்
மாலை வெயிலினில் பொன்நிறமாய் - என்
மனமென்னும் மேடையிற் சிந்தனையாய்
எல்லாக் காலமும் நீயிருப்பாய்
உயிரின் இறுதி வரையும் நீயிருப்பாய்.
- நா. பார்த்தசாரதி.
Posted by
JC Nithya
Wednesday, February 15, 2012
பவித்திரமான நட்பு சாத்தியமா..
விவாதித்துக் கொண்டதில்லை.
உனக்கென்ன பிடிக்கும் எனக்கென்ன பிடிக்கும்
பகிர்ந்து கொண்டதில்லை.
தினம் தினம் நிகழ்வுகளை ஒன்று விடாமல்
பரிமாறிக் கொண்டதில்லை.
துளி மௌனத்தில்..
வார்த்தைகளின் இடைவெளிகளில்..
மலரும் புன்னகையில்..
விவரிக்கமுடியா நம் புரிதல்கள்
அழகிய ஆச்சரியங்கள்.
தரத்தில் உயர்ந்ததொரு
சிநேகத்திற்கு
பெயரிடக் கூட
தோன்றவில்லை நமக்கு.
அதனாலோ என்னவோ
எதில் தொடங்கியது
என்றறியும் முன்பே
தொலைந்து போனது
அந்த கனவுத்தோழமை.
இன்று
மீதமிருப்பதெல்லாம்
நீ படித்த சுவடுகள்
தாங்கிய புத்தகங்களும்
நாம் பகிர்ந்த கவிதைகள்
சிதறிய நாட்குறிப்பும்
நம் சந்திப்புகளை ஒளிப்படங்களாய்
சேகரித்த நெஞ்சமும்
நம் புன்னகைகள் உதிர்ந்த இடத்தில்
சருகுகள் சுமந்த சாலையும்
இனி என்றுமே
நீ படிக்கப்போவதில்லை
என்றறிந்தும் எழுதுகின்ற
இந்த வரிகளும்தான்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Thursday, February 2, 2012
துள்ளித் திரியும் கால்கள். ஓரே ஓட்டமாய் ஓடி வருகிறேன் வெளியே. “பார்த்து டா…சகதியா இருக்கு…விழுந்திடாத…” கூடவே வருகிறது அக்கறை ததும்பும் உன் குரல்.
நானாவது விழுவதாவது....லேசாய் புன்னகைத்து, இதெல்லாம் மிக சாதாரணம் என்றெண்ணியபடி தொடர்ந்து ஓடுகிறேன்..
நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. சரட்டென சறுக்கி, தடுமாறி நிலைகுலைந்து விழுகிறேன். உடம்பெல்லாம் சகதி. முழங்கால்களில் சிராய்ப்பு.
அடக்க முடியாமல் கசியத் தொடங்கிய விழிகள்… எழ முயற்சிக்கிறேன்…முடியவில்லை… “ம்ம்மா விழுந்துட்டேன்…. .....” விசும்பும் எனை ஓடோடி வந்து கொஞ்சமும் யோசிக்காமல், அள்ளி எடுத்து அணைத்துக் கொள்கிறாய்.
அப்பியிருக்கும் சகதியோ ரத்தம் பெருகும் காயங்களோ அருவருக்க செய்யவில்லை உன்னை. நீ சொன்னதை அலட்சியம் செய்த என்மேல் எந்த கோபமுமில்லை.
உள்ளத்து அன்பை எல்லாம் சேர்த்தெடுத்து என்மேல் பொழிகிறாய்… "அழக் கூடாது...அதான் நான் இருக்கேன்..ல..எல்லாம் சரியாயிடும்..." என்கிறாய்...
ஆம், உன் விழிகளில் எப்போதும் நானிருக்க என்ன நேர்ந்திடும் எனக்கிங்கு?
இனி எல்லாம் சரியாகிவிடும்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, December 17, 2011
சாக நினைக்கையில்
உயிராய் தெரிகிறாய்.
எப்படி முற்றுப்புள்ளியிடுவதென
தயங்கி
மீண்டும்
வாழ முயல்கையில்
கனவாய் மறைகிறாய்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, December 12, 2011
வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.