Posted by
JC Nithya
Sunday, March 13, 2011
துளிர்த்து எழும் கேள்விகள்
புதைந்து அழும் காயங்கள்
திகைக்க செய்யும் குழப்பங்கள்
வெளிச்சம் இல்லா பயணங்கள்
..
எனக்கான ஒரு உலகம்
நொறுங்கி விழும்போதிலும்
...
சிதைவுகளின் நடுவே
சிறிதும் சலனமின்றி
திரிந்து கொண்டிருக்கிறது
மனம்
உனக்கான ஒரு பூவினைத்
தேடி..
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, March 7, 2011
தெரியவில்லை தான்
எனக்கு..
செயற்கையாய் புன்னகைக்க..
உணராததை உச்சரிக்க...
பணத்திற்கும் பதவிக்கும் மரியாதை கொடுக்க..
அர்த்தமற்ற வேஷங்களில் பொய்யாய் நடிக்க..
கணினித்திரையில் மழை ரசிக்க...
உயிர்சிலிர்க்கும் மழைநடுவே குடைவிரிக்க..
கையேந்தும் மழலை கண்டு
விழிஈரம் கசியாமல் நகர..
முகத்திற்காக ஒரு சிரிப்பும் முகம் மறைந்தபின்
ஒரு பேச்சுமாக பேசித் திரிய...
சிறு இலை என்னுள் ஏற்படுத்தும் பாதிப்புகளை தவிர்த்திட
இயந்திரங்களை பார்த்து பிரமிக்க...
பயணத்தில் இதமான பூங்காற்றை அனுபவியாது
வாகன நெரிசல் பற்றி விமர்சிக்க...
சத்தியமாக
தெரியவில்லை தான்
எனக்கு..
பிழைப்புக்காக
வாழ்க்கையை விட்டுத் தர...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Sunday, January 16, 2011
Posted by
JC Nithya
Wednesday, January 27, 2010
செல்லும் வழி அறியாமல்
சேரும் இடம் புரியாமல்
போகும் வேகம் உணராமல்
பார்க்கும் விழிகள் நோக்காமல்
தாயின் தோள் சரிந்து
உலகம் மறந்து
தூங்கும் சிறு குழந்தையின்
இமைகளுக்குள் படர்ந்திருக்கிறது
உன் மீதான என் நம்பிக்கை.
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Friday, December 25, 2009
எப்படி முடிந்தது
விரிந்து பரந்த பிரம்மாண்டம் சுருக்கி
சிறு கருவறைக்குள்
சூல் கொள்ள...
எப்படி முடிந்தது
அகிலம் ஆளும்
அரியணை துறந்து
மாட்டுத் தொழுவத்தில்
சிசுவென தவழ...
எப்படி முடிந்தது
சதாகாலமும் புகழ்பாடிடும்
தேவதூதர்களை விட்டு
காயப்படுத்தி களிப்படையும்
மனிதர்களோடு வாழ்க்கை செலவழிக்க...
எப்படி முடிந்தது
கூப்பிடும் காக்கை குஞ்சுக்கும்
உணவூட்டும் நிலைகடந்து
தானே பசியின் கொடுமைதனை
உணரத் துணிய...
எப்படி முடிந்தது
பிரகாசமும் மகிழ்ச்சியுமான
உலகம் பிரிந்து
ஏழ்மையின் வலி,
தாய்மையின் பரிவு,
சோதனையில் துணிவு,
நட்பின் இதம்,
நிராகரிப்பின் வேதனை,
புரிதலுக்கான ஏக்கம்,
குழந்தைகளுக்கான ப்ரியம்,
மரணம் தரும் சோகம்,
துன்பத்தில் உழல்பவர் கண்டு
உருகும் இதயம்,
தன்னுடையவற்காக பிரார்த்திக்கும் மனம்
என துளித்துளியாய்
மனித வாழ்வினை ருசித்து பார்க்க...
எப்படி முடிந்தது
எந்த தகுதியுமற்ற
எங்களை வாழ வைக்க
விலைமதிப்பற்ற நின் உயிரை
ஊற்றிக் கொடுப்பதற்கு...
எப்படி முடிந்தது என் இறைவா
இத்தனை அதிகமாய்
இத்தனை அதிகமாய்
எங்களை நேசிப்பதற்கு...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, December 19, 2009
வேறெதற்கும் உபயோகிக்காமல்
உனக்கென்றே கோர்த்து வைத்த
நட்சத்திர சொற்கள்.
உயிர்மலரும் பொற்பொழுதில்
பூப்பதற்கென்றே காத்து நிற்கும்
பார்வை அரும்புகள்.
சிறிதளவும் சிந்திவிடாமல்
உனக்கென்றே சேர்த்து வைத்த
இதழோர புன்னகைகள்
கனவு மெய்ப்படும் தேன்நிமிடத்தில்
கசிவதற்கென்றே தேக்கி வைத்த
விழியோர நீர்த்துளிகள்.
பத்திரமாய் சேமிக்கிறேன்.
என் உயிர் பொக்கிஷமே,
உனை சந்திக்கும் மழை நாளுக்காக...
~.~. ஜெ.சி. நித்யா .~.~
Posted by
JC Nithya
Monday, November 16, 2009
கடுங்குளிர் பிரதேசத்தில்
அரிதாய் முளைத்திடும்
சிறு கீற்று வெளிச்சத்தின்
இளஞ்சூட்டைப் போல
கதகதப்பாயிருக்கிறது
உன் நினைப்பு.
வலி பள்ளத்தாக்குகளில்
அலைந்திருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
பின்னிரவின் அமைதியில்
இதமாய் மிளிர்ந்திடும்
ஒற்றை நட்சத்திரம்
போதுமானதாயிருக்கிறது.
உன் ஒளிப்புன்னகை
சிதறல்களில் ஏதேனுமொரு
சிறு சில்லை
தேடிக்கொண்டிருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
புல் அறுபட்ட வெளியின்மேல்
சுகமாய் பெய்திடும்
குளிர்ந்த மழை போல
உயிர் விளைய செய்கிறது
உன் வார்த்தைகள்.
நினைவறுந்த பொழுதில்
சரிந்துகிடக்கும் எனக்குள்.
.~.~.~.~.~.~.~.~
~.~. ஜெ.சி. நித்யா ~.~