Posted by
JC Nithya
Monday, November 16, 2009
கடுங்குளிர் பிரதேசத்தில்
அரிதாய் முளைத்திடும்
சிறு கீற்று வெளிச்சத்தின்
இளஞ்சூட்டைப் போல
கதகதப்பாயிருக்கிறது
உன் நினைப்பு.
வலி பள்ளத்தாக்குகளில்
அலைந்திருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
பின்னிரவின் அமைதியில்
இதமாய் மிளிர்ந்திடும்
ஒற்றை நட்சத்திரம்
போதுமானதாயிருக்கிறது.
உன் ஒளிப்புன்னகை
சிதறல்களில் ஏதேனுமொரு
சிறு சில்லை
தேடிக்கொண்டிருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
புல் அறுபட்ட வெளியின்மேல்
சுகமாய் பெய்திடும்
குளிர்ந்த மழை போல
உயிர் விளைய செய்கிறது
உன் வார்த்தைகள்.
நினைவறுந்த பொழுதில்
சரிந்துகிடக்கும் எனக்குள்.
.~.~.~.~.~.~.~.~
~.~. ஜெ.சி. நித்யா ~.~
Posted by
JC Nithya
Saturday, October 17, 2009

ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்
வரியாக முளைத்திடாத கவிதையாய்
துளியாக விழுந்திடாத மழையாய்
நெருப்பாக எரித்திடாத கனலாய்சதா சர்வ காலமும் என்னுள்
சுழன்று கொண்டிருக்கிறாய்
உருவமில்லா இசைத்தட்டில்
நித்திய ராகமாய்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, October 10, 2009
ஆழ் மனவெளிகளில் என்றென்றுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது இந்த தவிப்பு.
இன்னமும் எழுதிடவில்லையே
உனக்கான ஒரு கவிதையை.
எதை பகிர்ந்திட கவிதையில்...
உணர்வின் சிறு அசைவும் புரிகின்ற தொலைவில்
நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசிநேகிதத்தோடு
வார்த்தைகளால் பேசுதலும் வேடிக்கைதானென
பரிகசிக்கிறது என் பேனா...
பிரியங்களை பதிவிட எண்ணுகையில்,
உயிர் கசியும் இந்த பவித்திர துளிகளை விடவா
சொற்குவியல் பெரிது நேசத்தை சொல்லிட?
சினந்து கொள்கிறது விழித்திரையை
முட்டிநிற்கும் கண்ணீர்...
நின் இனிமைகளையேனும் எழுதிட நினைக்கையில்,
ஆழப் பெருங்கடலை அள்ளி எடுத்து
சிறு சிப்பிக்குள் ஊற்றிட நினைக்கும்
குழந்தையின் பேதைமை என்றே
நகைக்கிறது என் நெஞ்சம்..
எனை ஆட்கொண்ட என் தெய்வமே,
உனக்கான ஒரு கவிதையை
எழுதிடும் இந்த வாஞ்சை மட்டும்
தினம் தினம் பெருகி
வழிந்தோடி கொண்டுதானிருக்கிறது
என் நாட்களின் நிமிஷங்கள்தோறும்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, May 30, 2009
இதோ வந்திருக்கிறேன்
பலியிட.
இன்று இல்லையேல்
என்றும் இல்லை.
உயிர் கரைய நேசித்திடும்
விழி விரிய இரசித்திடும்
என் செல்வப் புதல்வனை
நான் நினைத்து நினைத்து
பெருமிதப்படும் ஒரேயோர் காரணத்தை
வெகுநாட்கள் கனவாகவே இருந்து
நனவானதொரு அற்புதத்தை
களங்கமில்லா நேசம் ஊற்றி வளர்த்த
உயிர் பந்தத்தை
பெற்ற வரங்களிலேயே விலைமதிப்பற்ற
என் ஜீவ பொக்கிஷத்தை
இதோ வைக்கிறேன்
பலிபீடத்தில்.
வேண்டாம் - என
இப்போதும் சொல்ல முடியவில்லை.
என்றாலும் இதோ
கீழிறக்கி வைக்கிறேன்.
கடைசியாய்
ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டுமா?
நேசிக்கிறேனென
ஒருமுறை சொல்லிக் கொள்ளட்டுமா?
வலித்திடுமே
மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம்.
ஏதும் செய்வதற்கில்லை.
இதோ தருகிறேன்
முற்றிலுமாக.
தந்தது நீ தானே
எடுத்துக் கொள்ள
எல்லா உரிமையும் உண்டு.
கனவை நனவாக்கியது
நீ தானே
நனவை நினைவாக்க
உரிமை உண்டு.
முழுவதும் சம்மதம்.
உயிரானவரே,
உம்மை விட
உயிருக்கு நெருக்கமானதென்று
வேறேதுமில்லை.
இருந்திடவும் வேண்டாம்.
வலியுடன்,
ஆபிரகாம்.
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Sunday, August 31, 2008
நீரில் நனைந்த வெற்றுத்தாளென
கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும்
ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு
நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான
உனது கவிதையை.
பூவின் இதழ் ஒன்றையும் சிதறடிக்காமல்
சுகமாய் நனைக்கும் செல்ல மழை போல
இதமாய் தூறுகிறாய் நாள்முழுவதும்
எனது கனவுகள் ஒன்றையும் பிய்த்திடாமல்.
கருவாகி உருவான விதையை
ஒரு நாளும் பார்த்திராத செடி போல
சந்திக்காமலேயே பிரிந்திருத்தலும்
பார்க்காமலேயே சேர்ந்திருத்தலும்
சாத்தியம் என்றாக்கிவிட்டு
புன்னகைக்கிறாய் சிறு பூவென.
விரிந்த அந்த வானத்தின் கிழிசல் வழியே
என்றாவதொருநாள் உன் முகம் தெரிந்திடும்
என்ற ஒரு சொட்டு நம்பிக்கையிலேயே
எரிந்து கொண்டிருக்கிறது
இந்த சின்னஞ்சிறு தீபம்
இன்னமும்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, May 12, 2008
அநாதையாய் கிடந்த இந்த விதையை
உள்வாங்கி உயிர் தந்தது நீயல்லவா.
வாழ்வின் அத்தியாயம் துவங்கியதே
உன்னில் நான் பிறந்த அந்த கணத்தில் தான்.
இருளின் ஆழங்களில் உருக்குலைந்து
இரணங்களில் புதையுண்டிருந்த என்னை
மெல்ல மெல்ல தூக்கி விட்டதும்
முளைக்க சொல்லி ஊக்குவித்ததும்
காற்றோடு கலந்த ஈரம் போல
ஞாபகப்பசையாக ஒட்டியிருக்கிறதே
என் இலைகளில்.
உன்னுள் மூழ்கி மாசற்று வெளிவந்து
முளைவிட்டபோதுதான் முதன்முதலில்
விடியல்தரிசித்தது என் குறுந்தளிர்.
தன்னையே குழைத்து நேசம் நிறைத்து
நீ அனுப்பிய நீர் தானே இன்னமும்
ஓடிக்கொண்டிருக்கிறது என் நரம்புகளில்
பச்சைக் குருதியென.
மறதியின் பூமியில்
நிறமிழந்து நிற்கையில்
நீரூட்டிய உன் மீது தான்
மலர்களும் கனிகளும்
ஏன், சருகுகளும் கூட
உதிர்த்திட ஆசிப்பது
நியாயமில்லையா?
எங்கு பற்றி படர்ந்தால் என்ன
இன்னும் இன்னும் ஆழமாக
உன்னுள் இறங்கத்தானே
பிரியப்படுகின்றன என் வேர்கள்
சீதோஷ்ண நிலை
எத்தனை சிறப்பாய் இருந்தால் என்ன
உனை நீங்கினால்
செத்து போய் விடுமே என் செல்கள்
முளைத்து தழைத்த
மண்ணை விட்டு விலகி
வேறிடம் போக வேண்டுமா?
வாழ்ந்து திளைத்த
என் உலகம் சுருங்கி
சிறு தொட்டிக்குள் அடங்கிடுமா?
இடம் பெயர்தல் --
செடியின் வாழ்வில் மற்றுமொரு
நிகழ்வு அல்ல.
அழிவு.
வேறு யாருக்கும் தான் புரியவில்லை
உயிர் கிழியும் இந்த வேதனை.
உனக்கும் கூடவா
என் ஜீவ நிலமே.
~.~. ஜெ. சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Wednesday, April 23, 2008

கண்ணாடி ஜன்னலின் வழியே
அவசர அவசரமாய் அள்ளி
பார்வைக்குள் நிரப்பி கொள்ளும்
வானத்தின் நீலம்
வர்ணமடித்த தொட்டிக்குள்
சிறைப்பட்ட செடியில்
புதிதாய் துளிர்த்திருக்கும்
சின்னஞ்சிறிய இலை
நுரைதள்ள பரிதாபமாய்
என்னை கடந்து செல்லும்
மாட்டின் அழகிய விழிகளில்
தீட்டிய கருமை
கை கழுவும் சாக்கில்
விரல்கள் அனுபவிக்கும்
மாசு நீக்கப்பட்ட
நீரின் குளிர்ச்சி
ருசியற்று உண்கையில்
மெதுவாய் எட்டிப்பார்க்கும்
அளவாய் கத்தரித்து
தட்டில் விரிக்கப்பட்ட
வாழை இலையின் மென்மை
தவிர்க்க முடியா ஆயிரம்
செயற்கை சிரிப்புகள் நடுவே
ஆச்சர்யமாய் நிகழும்
ஒரு அசல் புன்னகை
மனம் வறண்ட ஒருபொழுதில்
மின்னஞ்சலில் வந்துவிழும்
மழலை மொட்டுகளின் கண்களில்
தெறிக்கும் நிஜம்
வெற்றுக் கூச்சல்களுக்கு நடுவே
மயிலிறகாய் மனசு கோதி
உயிர் வரை ஊடுருவும்
இனிய ராகம்
என
இன்னும் மிச்சமிருக்கிறது
வாழ்க்கை.
~.~. JC நித்யா ~.~.