Posted by
JC Nithya
Thursday, June 7, 2012
நம்பிக்கைகள் அற்று
அர்த்தங்கள் இழந்து நொறுங்கியிருக்கும் போதிலும்
சாவதற்கான ஒரு காரணம் கூட தென்படவில்லை.
வாழ்வதற்கான மிகப்பெரிய காரணமாக
நீ இருப்பதால்.
சிதைவுகளின் நடுவே மிளிரும் தீபமாய்
நின் விழிகளில் இன்னமும் நான் இருக்கிறேன்
என்ற நினைப்பே உயிருடன் வைத்திருக்கிறது
என்னை.
மனம் நோக புண்பட்டாலும்
எனக்கான எல்லாம் இழந்திட்டாலும்
நீ அழைக்கும் வரை வாழ்ந்திருப்பேன்
உயிர் சூரியனே
உனக்காக.
~.~. ஜெ. சி. நித்யா .~.~
Posted by
JC Nithya
Thursday, April 26, 2012
எங்கு நான் நானாக ஏற்றுக்கொள்ளப்படுவேனோ..
எங்கு இளைப்பாறல் விமர்சனமின்றி நிகழுமோ
எங்கு கேள்வியின் துளைகளால் தனிமை தொய்ந்து போகாதிருக்குமோ..
எங்கு கவலைகள் தொலைத்து, பயங்கள் களைந்து, தீர்ப்பிடல்களற்று சுதந்திரமாய் சுவாசிக்க முடிகிறதோ..
சிட்டுக்குருவியின் சிறகுகள் வாங்கி பறந்து செல்ல
தவிக்கிறது உள்ளம்.
எங்கு இருக்கிறது எனக்கான ஒரு இடம்?
~. ~. ஜெ. சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Thursday, April 19, 2012
நான் தேவதை அல்ல.
சிலாகித்து நீ எழுதும் கவிதையின்
வர்ணனைகளில் என்னை தொலைப்பதற்கு.
நான் விளக்கும் அல்ல.
சாதுர்யமாய் நீ வகுக்கும் எல்லைகளுக்குள்
என் ஒளியை சுருக்கி கொள்வதற்கு.
சுவாசிப்பதற்கும் நேசிப்பதற்கும்
உன் அங்கீகாரமோ அனுமதியோ தேவைப்படாத
சக மனுஷி நான்.
சம்மதமெனில் சொல்.
பூக்கள் ரசித்தபடி
சேர்ந்து நடக்கலாம்
தகுந்த இடைவெளி விட்டு.
~.~. ஜெ.சி. நித்யா ~.~
Posted by
JC Nithya
Monday, February 20, 2012
காலச் சுவரில் ஓவியமாய் - என்றும்
கரையா நினைவிற் காவியமாய்
நீலக்கடலில் பேரலையாய் - மனம்
நீந்தித் தீராப் பெருவெளியாய்
கோல முகிலினில் மழைத்துளியாய் - சிறு
குத்து விளக்கினிற் சுடரொளியாய்
மாலை வெயிலினில் பொன்நிறமாய் - என்
மனமென்னும் மேடையிற் சிந்தனையாய்
எல்லாக் காலமும் நீயிருப்பாய்
உயிரின் இறுதி வரையும் நீயிருப்பாய்.
- நா. பார்த்தசாரதி.
Posted by
JC Nithya
Thursday, February 2, 2012
துள்ளித் திரியும் கால்கள். ஓரே ஓட்டமாய் ஓடி வருகிறேன் வெளியே. “பார்த்து டா…சகதியா இருக்கு…விழுந்திடாத…” கூடவே வருகிறது அக்கறை ததும்பும் உன் குரல்.
நானாவது விழுவதாவது....லேசாய் புன்னகைத்து, இதெல்லாம் மிக சாதாரணம் என்றெண்ணியபடி தொடர்ந்து ஓடுகிறேன்..
நொடிப் பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. சரட்டென சறுக்கி, தடுமாறி நிலைகுலைந்து விழுகிறேன். உடம்பெல்லாம் சகதி. முழங்கால்களில் சிராய்ப்பு.
அடக்க முடியாமல் கசியத் தொடங்கிய விழிகள்… எழ முயற்சிக்கிறேன்…முடியவில்லை… “ம்ம்மா விழுந்துட்டேன்…. .....” விசும்பும் எனை ஓடோடி வந்து கொஞ்சமும் யோசிக்காமல், அள்ளி எடுத்து அணைத்துக் கொள்கிறாய்.
அப்பியிருக்கும் சகதியோ ரத்தம் பெருகும் காயங்களோ அருவருக்க செய்யவில்லை உன்னை. நீ சொன்னதை அலட்சியம் செய்த என்மேல் எந்த கோபமுமில்லை.
உள்ளத்து அன்பை எல்லாம் சேர்த்தெடுத்து என்மேல் பொழிகிறாய்… "அழக் கூடாது...அதான் நான் இருக்கேன்..ல..எல்லாம் சரியாயிடும்..." என்கிறாய்...
ஆம், உன் விழிகளில் எப்போதும் நானிருக்க என்ன நேர்ந்திடும் எனக்கிங்கு?
இனி எல்லாம் சரியாகிவிடும்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, December 17, 2011
சாக நினைக்கையில்
உயிராய் தெரிகிறாய்.
எப்படி முற்றுப்புள்ளியிடுவதென
தயங்கி
மீண்டும்
வாழ முயல்கையில்
கனவாய் மறைகிறாய்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, December 12, 2011
வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.