Posted by
JC Nithya
Wednesday, June 17, 2026
Posted by
JC Nithya
Friday, June 12, 2026
அழகான வாழ்க்கைகள்
ஆயிரம் வடிவமைத்து
என் முன் பரப்பி வைத்து
பிடித்த ஒன்றை
தேர்ந்தெடுக்கச் சொன்னால்
அத்தனையும் உதறித் தள்ளி விட்டு
உன்னிடமே ஓடி வருகிறது மனம்.
நீ அற்ற வாழ்வென்ன வாழ்வு?
~. ~. ஜெ. சி. நித்யா. ~. ~
11 June 2026.
Posted by
JC Nithya
Monday, May 11, 2026
ஒரு தலைவனுக்கான இடம்
வெறுமையாகவே இருக்கிறது.
எதை எதையோ இட்டு நிரப்பிட
முயற்சிக்கிறீர்கள்.
மொழி பற்று
ஆணவம்
அலட்சியம்
பிம்பம்
வெற்று பேச்சு
ஆடல் பாடல்
ஆரவாரம்
எள்ளல்
என எதிலும் நிரம்பாமல்
வெறுமையாகவே இருக்கிறது.
யார் உண்மையான தலைவன்
தன் மக்களுக்காக உயிரையும் கொடுப்பவன்.
இருளில் இருப்பவர்களை வெளிச்சத்துக்கு வழி நடத்துபவன்.
காலிடறி விழுபவனை தாங்கி பிடித்து தூக்கி விடுபவன்.
தன்னை வெறுத்து தன் மக்களை நேசிப்பவன்.
தனக்கான உரிமைகளை விட்டு மக்களை உயர்த்துபவன்.
உண்மையையும் ஒழுக்கத்தை உயிரினும் மேலாய் ஓம்புபவன்.
அப்படி ஒரு தலைவனுக்கான இடத்தை
வெறும் பிம்பங்களை இட்டு நிரப்புகிறீர்கள்.
பரிதாபமாய் இருக்கிறது.
நிஜமென்று நினைத்து
நிழலை பின்தொடர்கிறீர்கள்
எங்கு இட்டு செல்லுமோ.
பதைக்கிறது மனம்.
~. ~. ஜெ. சி. நித்யா. ~. ~.
10 மே 2026.
Posted by
JC Nithya
Thursday, February 26, 2026
சுழல்காற்றில் சிக்கியவள்
பெருங்காற்றில் அடிபட்டவள்
இடித்து உடைத்து
அடித்து துவைத்து
கசக்கி பிழிந்து
சல்லி சல்லியாய் நொறுக்கி
அடையாளம் அழிந்து
உருவிழந்து நிற்கையில்
"ஏன் இப்படி?" என்கிறேன்.
"இதில் தான் என் வழி" என்கிறாய்.
சாதாரணமானவள் நான்.
வானுயர்ந்த நின் எண்ணங்களை
புரியத் தெரியாத அறிவிலி நான்.
நம்பிக்கையின் அடித்தளம்
உலுக்கப்படும்போது
இருளின் அடர்த்தி
அதிகரிக்கும்போது
சாய்ந்து கொள்ள தோள்கள்
இல்லாதபோது
அடுத்த அடி எடுத்து வைக்க
வலிமையற்றபோது
கண்ணீராய் விழுகிறேன்
நின் பாதங்களில்.
~. ~.ஜெ. சி. நித்யா. ~. ~
26.02.2026.
"கர்த்தருடைய வழி
சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும்
இருக்கிறது."
நாகூம் 1:3
Posted by
JC Nithya
Sunday, January 4, 2026
நின் விழிகளில் நானும்
நின் கரங்களில் என் விரல்களும்
இருப்பதை விட
வேறென்ன வேண்டும்
நிச்சயங்களற்ற இந்த
வாழ்வினை சந்திக்க.
~.~. ஜெ.சி.நித்யா .~.~
01.01.2026
Touched by this verse:
"கர்த்தராகிய நான் ... அவளைப் பார்த்து,
அவள் வலதுகையைப் பிடித்துக்கொண்டு,
அவளுக்குச் சொல்லுகிறதாவது..."
ஏசாயா 45:1
Posted by
JC Nithya
Friday, June 13, 2025
பாதங்களின் கீழிருக்கும் பூமி
அங்குலம் அங்குலமாய் உருவப்படும்போதும்
மனதில் சிறு சலனமுமின்றி
பொங்கும் தைரியம் கண்ணில் தெறிக்க
நிமிர்ந்து நின்று இந்த உலகமே
எனக்காக இயங்குவதைப் போல்
ஆனந்தமாய் புன்னகைக்க முடிகிறதே என்னால்.
என் ஒட்டுமொத்த வாழ்க்கையையும்
அள்ளி எடுத்து கசக்கி பிழிந்தால்
சொட்டும் நீரின் ஒவ்வொரு துளியிலும்
உன் முகமே நிறைந்து நிற்கும்.
வாழ்தலை நீ தானே கற்று தந்தாய்
வாழ்க்கையை நீ தானே வசந்தமாக்கினாய்.
உன்னை அறிந்ததற்காய் பெருமிதமடைகிறேன்.
என்னை நீ தெரிந்து கொண்டதை எண்ணி உவகை கொள்கிறேன்.
சாவின் விளிம்பிலும்
வாழ்வின் மகத்துவங்களை
விவரிக்க உன்னால் மட்டுமே கூடும்.
நீ என்ற ஒரு அற்புதம்
வாழ்வில் நிகழ்ந்ததை தான்
மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.
வேறென்ன தான் இருக்கிறது
இந்த வாழ்வில் ருசிப்பதற்கு.
நின் அன்பெனும் மகோன்னதத்தை தவிர.
தேனில் கிறங்கிய வண்டாய்
நின் அன்பிலேயே
நனைந்து கிடக்க வேண்டும்
நித்திய நித்தியமாய்.
12.06.2025.
~.~. ஜெ. சி. நித்யா .~.~.
Posted by
JC Nithya
Wednesday, December 25, 2024
இருளின் தனிமையில் தான்
ஓரு ஒளி நட்சத்திரத்தின்
தேவை உணரப்படுகிறது.
எல்லாமும் பெற்று
செயற்கை ஒளிகளில் மயங்கித்
திரியும்போது
புரியாத
நின் நட்சத்திரத்தின் மேன்மை
இப்பொது புரிகிறது.
மனிதர் எதிர்பார்க்காத
எளிய சூழ்நிலையில்
ராஜாதி ராஜனின்
பிறப்பு நிகழ்ந்ததை
இன்னமும் பலரால்
ஜீரணிக்க முடியவில்லை.
சமூகத்தின் அடிமட்டத்திற்கும் கீழ் சென்று
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது
முழு உலகுக்கான மீட்பு
என்று சொல்லாமல் சொன்ன
உன் கம்பீரம்
மெய்சிலிர்க்க செய்கிறது.
நின் போல் பிறந்தவர் எவரும் இல்லை.
நின் போல் வாழ்ந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் இறந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் உயிர்த்தெழுந்து வாழ்பவரும் எவரும் இல்லை.
நீ பிறந்த இந்த பொன்நாளில்
இருளில் இருப்பவர்களுக்கு ஒளி பிரகாசிக்கட்டும்.
வறியவர்களின் நம்பிக்கை துளிர் விடட்டும்.
வலிமை அற்றவர்கள் வாழும் சக்தியை பெறட்டும்.
உலகத்தின் தீமைகள் வழுவிழக்கட்டும்.
போலி பகட்டுக்கள் ஒழிந்தோயட்டும்.
அன்பு ஒன்றே ஆதராமாக உலகம் அறியட்டும்.
நீ பிறந்ததினால் தான் உலகம்
இன்னும் நிலைத்திருக்கிறது.
நின் வாழ்வு தான்
எங்களை வாழ வைக்கிறது.
இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!
~.~. ஜெ. சி. நித்யா~.~.
Posted by
JC Nithya
Friday, December 6, 2024
வாழ வைப்பாய் என நேசிக்கவில்லை.
வாழ்தலே நீதானென நேசித்தேன்.
வலி தீர்ப்பாய் என நேசிக்கவில்லை
வலிமையே நீதானென நேசித்தேன்.
யாருமற்றதினால் நேசிக்கவில்லை
சகலமும் நீதானென நேசித்தேன்.
உடன் வருவாய் என நேசிக்கவில்லை
உயிரே நீதானென நேசித்தேன்.
நரகத் தீக்கு தப்புவிப்பாயென நேசிக்கவில்லை
மோட்சமே நீதானென நேசித்தேன்.
இவ்வுலகில்
நேசமெனப்படுவது எதுவும்
நிசமில்லை.
உனையன்றி நேசமென்று
ஏதுமில்லை.
~.~. ஜெ. சி. நித்யா.~.~.
Posted by
JC Nithya
Thursday, October 17, 2024
திக்குத் தெரியாத காட்டில்
திகைத்து நிற்கும் போது மட்டுமல்ல.
தினசரி வாழ்க்கையின்
சின்னஞ் சிறிய முடிவுகளுக்கும்
திணறி தவிக்கையில்
திசை காட்டும் வெளிச்சமாய்
நின் வார்த்தை
மனதை நிறைக்கிறது.
அகிலத்தையும் படைத்த
அதே வார்த்தை தான்
இந்த சிறியவளுக்காகவும்
இறங்கி வருகிறது.
இப்படி வாழ்தல் எத்தனை
பெரும்பாக்கியம்!
தேனாய் தித்திக்கும்
அதே வார்த்தைதான்
திடப்படுத்தி திரும்ப எழுந்து
நிற்கவும் செய்கிறது.
இதுவன்றி வேறெது பேரின்பம்!
Posted by
JC Nithya
Saturday, May 25, 2024
எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது
ஊருக்கு காண்பிக்க...
அழகாய் அலங்கரிக்கப்பட்ட பொழுதில்...
சூரிய வெளிச்சத்தில் இயற்கை பின்னணியில்.
அந்நிய மண்ணில் அடையாளம் இழக்காமல்...
நண்பர்களோடு விளையாடினபோது...
கனவு கண்ட பணியிடத்தில்...
உயிருக்குயிராய் நேசிக்கும் நபரோடு...
ஒரு நாய்குட்டியோடு அல்லது ஒரு பறவையோடு
எல்லா செல்வத்திலும் மேலான குழந்தைகளோடு...
சற்று மெருகேற்றி...சற்று ஒளி கூட்டி...
அழகாய் பகிர எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது...
அவள் இன்னமும் தேடுகிறாள்.
தனது முகங்களின் குவியலுக்குள்.
மாசற்ற அன்பினால் நிறைந்து
மனமகிழ்ந்து சிரித்த பொழுதொன்றின் முகத்தை...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
25 May 2024.
Posted by
JC Nithya
Wednesday, May 15, 2024

ஏதுமில்லை.
எல்லாம் அற்று அகன்று
தனித்திருக்கிறேன்.
எதைக் கொண்டாடுவது?
இத்தனை வருஷங்கள் வாழ்ந்ததையா
இன்னும் எத்தனை நாட்கள்
என்று கூட தெரியா
இந்நிலையையா
எதற்கு இத்தனை தூரம் வந்தேன்
தெரியாது.
ஏனிருக்கிறேன் இன்னும்
தெரியாது.
யாருக்காக வாழ்வது
கையில் எதுவுமில்லை.
வெறுமையாய் நிற்கிறேன்.
வாழ்வின் விளிம்பில்.
இருதயத்தின் சதையை
பிய்த்தெடுப்பது போல்
தாள முடியா வலி.
எனக்கான வெளிச்சம் எங்குமில்லை.
எனக்கான நேசம் எங்குமில்லை.
நொறுங்கி இருக்கிறேன்.
முற்றிலுமாய்.
என் தேவனே என் தேவனே
எனக்கான நின் பாதை
இங்கிருந்து தான் தொடங்குகிறதா?
எல்லாவற்றையும் இழந்த பின் தான்
என் சிலுவை எது என்ற புரிதல் வருமா?
உனையன்றி உறவேதுமில்லை.
நீயின்றி வாழ்வேயில்லை.
வேறெங்கு செல்வேன்?
ஜீவனே நீயாக இருக்கையில்.
முடிவின் புள்ளியில்
குவிந்திருக்கிறது
துவக்கத்தின் ஊற்று.
Nithya JC.
15 May 2024.
Posted by
JC Nithya
Friday, December 23, 2022
என்னுள்
நீக்கமற நிறைந்திருக்கும்
உன்னை நுகராமல்
என்னை அறிதல்
நெருங்கி வரும்
எவருக்கும் சாத்தியமில்லை.
நெஞ்சம் விம்மி எழுந்து
விழியில் நீராக கசியாமல்
ஒருபோதும் சொல்ல முடிந்ததே இல்லை
உன் மீதான எனதன்பை.
சுழல் காற்றில் சிக்குண்ட சருகைப்
போன்ற வாழ்க்கையில்
ஏதோ ஒரு சலனமற்ற நிசப்த கணத்தின்
நீட்சி நீ தான்.
சுக்கு நூறாய் உடைந்த பின்னும்
ஏதோ ஒரு சொல் என்னை மீண்டும் நிற்க செய்யுமெனில்
அது உன்னுடைய வார்த்தை தான்.
என்றாவது ஓர் நாள்
"இவள் மிகவும் நேசித்தாள்"
என சொல்லிவிடமாட்டாயா
என்றுதான் காத்திருக்கிறேன்
உயிர்வலி பொறுத்து.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, May 15, 2021
எங்கு நோக்கினும்
மனிதர்கள் இலைகளை போல் உதிர்கிறார்கள்.
காலம் யாருக்காகவும் நிற்காமல்
கோரமாய் சுழல்கிறது.
வாழ்க்கை துணையை பறிகொடுத்தவர்கள்.
பெற்றோரை இழந்த பிள்ளைகள்.
அன்பிற்குரியவர்களை இழந்தவர்கள்.
பரிதாபமாய் நிற்கிறார்கள்
வாழ்க்கை நதியருகில்.
நான்கு சுவர்களுக்குள்
முடங்கியிருக்கும் நாங்களோ
செய்வதறியாது திகைக்கிறோம்.
தேவனே
இரக்கம் காட்ட மாட்டீரா??
கண்ணெதிரில் என் மக்கள்
செத்து மடிகின்றனரே
தவறிழைத்தவனும்
அநீதி செய்தவனும்
அக்கறையற்ற சுயநலவாதிகளும்
தேசத்தை அழிக்க நினைத்தவர்களும்
நன்றாகத்தானே வேடிக்கை பார்க்கின்றனர்
அழிந்து மடிவதெல்லாம்
அப்பாவி ஜனங்கள்தானே.
என் தேவனே என் தேவனே
உம்மை நம்பாதவர்களுக்காகவும்
சேர்த்துதான் வேண்டுகிறேன்.
இந்த வாதையை
நிறுத்த மாட்டீரா.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, January 19, 2019
கொதிக்கும் தார் சாலையோரத்தில்
இரு சக்கர வாகன நெரிசலினிடையில்
பரிதாபமாய் நின்றது
வழி தவறிய வண்ணத்துப்பூச்சி ஒன்று.
இன்னும் எவ்வளவு தூரம்
பறக்க வேண்டுமோ
அதின் மெல்லிய இறகுகள்
புழுதி படியா பூவொன்றை கண்டுபிடிக்க.
பதறுகிறது மனம்.
Posted by
JC Nithya
Thursday, March 16, 2017
என்னதான் நாம் பார்த்து பார்த்து நீருற்றி வளர்த்தாலும்
சிறுமழை வந்து நனைத்து போனதும்
இந்த செடியும் இலைகளும் அடைகின்ற அழகும் உற்சாகமும்
நம்மால் ஒருபோதும் உண்டாக்க முடியாதவை.
உயிர் மலர்த்தும் இரகசியமும் மனம் நிறைக்கும் அதிசயமும்
உருவாக்கியவருக்கே சாத்தியம் போல.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Thursday, August 27, 2015
இப்பொழுதும் எனக்கான
இறகொன்றை உதிர்த்துக்கொண்டுதானிருக்கிறது
அந்த பறவை தினம் தினம்.
நான் தான் கவனிப்பதில்லை.
எடுத்து பத்திரப்படுத்த நேரமுமில்லை.
பெருக்கித் தள்ளவும் மனமின்றி
வாசலின் மூலையில் குவித்து விட்டு
திரும்பி பார்க்காமல் வந்துவிடுகிறேன்
அடுப்படிக்கு.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Thursday, December 25, 2014
நான் உன்னை அறிந்ததில்லை.
நீயே என்னை தெரிந்தெடுத்தாய்.
நான் உன்னை தேடவில்லை.
நீயே என்னை கண்டறிந்தாய்.
அன்பின் வாசமறியாதிருந்தேன்
நீயே என்னை நேசித்தாய்.
வாழ்தலின் பொருளறியாதிருந்தேன்
நீயே வாழ்வாகினாய்.
மதமென்ன மதம்
மனமெல்லாம் உயிரெல்லாம்
நீயே நிறைந்திருக்கையில்.
என்னவென்று வாழ்த்துவது.
நின் பிறந்த நாளில்.
எனை ஊடுருவிய உனதன்பு
எல்லோருக்குள்ளும் வியாபிக்க வாழ்த்துகிறேன்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Sunday, June 22, 2014
மன்னியுங்கள்.
உங்களுக்கு தேவைப்படும்
செயற்கை புன்னகைகள் என்னிடமில்லை
அசல் புன்னகைகளை தர விருப்பமில்லை.
மன்னியுங்கள்.
உலகெல்லாம் தீயதென கருதி கதவடைத்து வீட்டினுள் ஒளிந்துகொள்வதில் சம்மதமில்லை.
என் வழியெங்கும் நல்லவர்களை மட்டும் மனதில் சேமிக்கவே ஆசைப்படுகிறேன்.
மன்னியுங்கள்.
அடுத்தவர்களை குற்றப்படுத்துவது தான் உங்களை பக்திமான்களாக காட்டிகொள்வதெனில் எனக்கு அதில் இஷ்டமில்லை.
"உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியக்கடவன்" என்ற குரல் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது எனது செல்களில்.
மன்னியுங்கள்.
உங்களை போன்றதொரு வாழ்க்கைக்கு நான் வடிவமைக்கப்படவில்லை.
எனது வாழ்க்கையின் எல்லைகள் உங்களை வரவேற்கவில்லை.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, May 6, 2014
.
சிறு வயதில் உறவுகள், பாசம், வேறேதும் முக்கியமில்லை,
படிப்பும் வெற்றியுமே முக்கியம் என்று சொல்லி குழந்தைகளை வளர்க்கிறோம்.
அவர்கள் பெரியவர்களாகி வேலையும் வசதி வாய்ப்புமே முக்கியமென வாழ நேர்கையில் அவர்களை குறைசொல்கிறோம்.
எங்கிருந்து சிதைந்து போனது அன்பின் அழகிய வேர்கள்!!
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, December 10, 2013
எல்லா புன்னகைகளுக்கும் பின்னால் கண்களுக்கு புலப்படாத
யாரோ ஒருவரின் கண்ணீர் மறைந்திருக்கிறது.
எல்லா பெருமூச்சுகளுக்கும் கீழே உள் ஆழத்தில் ஏதோ ஒரு
வலிதரும் நினைவு மறைந்திருக்கிறது.
காண்பதெல்லாம் முழுவதும் உண்மையல்ல.
மறைந்திருப்பதாலேயே எதுவும் மதிப்பிழந்து விடுவதில்லை.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.