
அதிகாலை அவசரம் பேருந்தில்.
ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கிறாய்.
இடம் கிடைத்த மகிழ்ச்சியில்
உன்னருகில் அமர்கிறேன் நான்.
மையிட்ட கண்கள்.
மின்னிடும் சிறிய மூக்குத்தி.
அழகாக வாரி முடித்த கூந்தலில் கதம்பப் பூ.
பூப்போட்ட புடவை.
கலகலக்கும் கண்ணாடி வளையல்கள்.
கன்னத்தில் கையூன்றி வேடிக்கை
பார்த்துக்கொண்டு வருகிறாய் நீ.
என் தமிழ் மண்ணின் பெண்ணழகை ரசிக்கிறேன் நான்.
திடீரென ஒரு குரல் கல்லெறிகிறது,
நம் இருவரின் மௌனத்திலும்.
அந்த நடத்துனர் தான்!!!
உன்னைப் பார்த்து, "எங்கே தங்கியிருக்க?"
என்று அதிகாரமாய் கேட்க,
பதறிப் போய் உன்னைப் பார்க்கிறேன்.
நீயோ தயங்கி, மெதுவாய் திரும்பி பதில் சொல்கிறாய்.
... வார்த்தைகள் அல்ல.
உன் குரல் மட்டுமே என் செவி சேர்கிறது.
பெண்ணின் குரல் இல்லையே!!!
....
அப்படியென்றால், நீ . . . நீ. . . அ வ ள் இல்லையா?
அவளாகியிருக்கும் . . . அவனா?
அதிர்ந்து போகிறேன் நான்.
அடுத்தடுத்து கேள்விக்கணைகள் பாய்ந்து வருகிறது,
உன்னை நோக்கி,
ஒரு அஃறிணையிடம் பேசும் தொனியில்.
எந்த ஊரு? --- சேலம்.
சம்பாதிக்கிற காசையெல்லாம் இன்னா செய்வ? -- ஒரு பார்வை.
அம்மா அப்பா விரட்டி விட்டாங்களா? -- மெதுவாய் ஒரு தலையசைப்பு.
ஓடி வந்துட்டியா? -- மவுனம்
போய் பாக்கவேயில்லையா? -- . . .
இனி சேத்துக்க மாட்டாங்களா? -- . . .
ஐயோ... உன் விழியோரம் ஈரம் கசிந்து... சிந்தப் பார்க்கிறது!
இப்படி எத்தனை முறை குத்திக் கிழித்திருக்கும்
இந்த சமூகம் அதே இரணங்களை திரும்பத் திரும்ப.
ஒரே ஒரு முறை என்னை சந்திக்க துணிகிறது உன் கண்கள்.
அந்த ஒரு துளி பார்வையில்,
மெலிதாய் ஒரு ஏக்கம்,
மெல்லியதாய் ஒரு கோபம்,
கொஞ்சம் தவிப்பு, சிறிது விரக்தி எல்லாம் இருந்தது.
எனக்கு உன் விரல்களை பிடித்துக்
கொள்ள வேண்டும் போலிருந்தது கண்ணம்மா.
உன் வேதனை புரிகிறதெனக்கு என்று
சொல்ல வேண்டும் போலிருந்தது.
படைப்பில் ஒரு எழுத்துப் பிழையா நீ? இல்லையே.
என் இறைவன் ஒரு போதும்
பிழை செய்வதில்லையே!!!
நான் ரசித்த உனது அந்த நளினம்
எத்தனை பெண்களிடம் இல்லை...
உனக்கிருக்கும் வாழும் துணிவும், துடிப்பும்,
எத்தனை ஆண்களிடம் இல்லை...
கண்ணீரை அடக்கிய உன் சக்தி,
சிறுமையை எதிர்கொண்ட உன் தைரியம்
எத்தனை மனிதர்களிடம் இல்லை...
என்றெல்லாம் சொல்ல வேண்டும் போலிருந்தது...
நிறுத்தம் வந்துவிட்டது.
இருவரும் இறங்குகிறோம்.
எதிரெதிர் திசையில் நடக்கிறோம்.
மனம் கனத்துப் போயிருக்கிறது.
நாள் முழுவதிலும் விழியோரத்தில்
ஒரு நீர்த்துளி உருண்டு கொண்டிருக்கிறது.
என்னைப் போலவே
கோழையாய்...
~.~. JC நித்யா ~.~.