
நீரில் நனைந்த வெற்றுத்தாளென
கசங்கியிருக்கும் மனத்தில் சிறு கீறலும்
ஏற்படுத்தாமல் எங்கோ இருந்து கொண்டு
நிதானமாய் எழுதுகிறாய் எனக்கான
உனது கவிதையை.
பூவின் இதழ் ஒன்றையும் சிதறடிக்காமல்
சுகமாய் நனைக்கும் செல்ல மழை போல
இதமாய் தூறுகிறாய் நாள்முழுவதும்
எனது கனவுகள் ஒன்றையும் பிய்த்திடாமல்.
கருவாகி உருவான விதையை
ஒரு நாளும் பார்த்திராத செடி போல
சந்திக்காமலேயே பிரிந்திருத்தலும்
பார்க்காமலேயே சேர்ந்திருத்தலும்
சாத்தியம் என்றாக்கிவிட்டு
புன்னகைக்கிறாய் சிறு பூவென.
விரிந்த அந்த வானத்தின் கிழிசல் வழியே
என்றாவதொருநாள் உன் முகம் தெரிந்திடும்
என்ற ஒரு சொட்டு நம்பிக்கையிலேயே
எரிந்து கொண்டிருக்கிறது
இந்த சின்னஞ்சிறு தீபம்
இன்னமும்...
~.~. JC நித்யா ~.~.