Posted by
JC Nithya
Friday, December 25, 2009
எப்படி முடிந்தது
விரிந்து பரந்த பிரம்மாண்டம் சுருக்கி
சிறு கருவறைக்குள்
சூல் கொள்ள...
எப்படி முடிந்தது
அகிலம் ஆளும்
அரியணை துறந்து
மாட்டுத் தொழுவத்தில்
சிசுவென தவழ...
எப்படி முடிந்தது
சதாகாலமும் புகழ்பாடிடும்
தேவதூதர்களை விட்டு
காயப்படுத்தி களிப்படையும்
மனிதர்களோடு வாழ்க்கை செலவழிக்க...
எப்படி முடிந்தது
கூப்பிடும் காக்கை குஞ்சுக்கும்
உணவூட்டும் நிலைகடந்து
தானே பசியின் கொடுமைதனை
உணரத் துணிய...
எப்படி முடிந்தது
பிரகாசமும் மகிழ்ச்சியுமான
உலகம் பிரிந்து
ஏழ்மையின் வலி,
தாய்மையின் பரிவு,
சோதனையில் துணிவு,
நட்பின் இதம்,
நிராகரிப்பின் வேதனை,
புரிதலுக்கான ஏக்கம்,
குழந்தைகளுக்கான ப்ரியம்,
மரணம் தரும் சோகம்,
துன்பத்தில் உழல்பவர் கண்டு
உருகும் இதயம்,
தன்னுடையவற்காக பிரார்த்திக்கும் மனம்
என துளித்துளியாய்
மனித வாழ்வினை ருசித்து பார்க்க...
எப்படி முடிந்தது
எந்த தகுதியுமற்ற
எங்களை வாழ வைக்க
விலைமதிப்பற்ற நின் உயிரை
ஊற்றிக் கொடுப்பதற்கு...
எப்படி முடிந்தது என் இறைவா
இத்தனை அதிகமாய்
இத்தனை அதிகமாய்
எங்களை நேசிப்பதற்கு...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, December 19, 2009
வேறெதற்கும் உபயோகிக்காமல்
உனக்கென்றே கோர்த்து வைத்த
நட்சத்திர சொற்கள்.
உயிர்மலரும் பொற்பொழுதில்
பூப்பதற்கென்றே காத்து நிற்கும்
பார்வை அரும்புகள்.
சிறிதளவும் சிந்திவிடாமல்
உனக்கென்றே சேர்த்து வைத்த
இதழோர புன்னகைகள்
கனவு மெய்ப்படும் தேன்நிமிடத்தில்
கசிவதற்கென்றே தேக்கி வைத்த
விழியோர நீர்த்துளிகள்.
பத்திரமாய் சேமிக்கிறேன்.
என் உயிர் பொக்கிஷமே,
உனை சந்திக்கும் மழை நாளுக்காக...
~.~. ஜெ.சி. நித்யா .~.~
Posted by
JC Nithya
Monday, November 16, 2009
கடுங்குளிர் பிரதேசத்தில்
அரிதாய் முளைத்திடும்
சிறு கீற்று வெளிச்சத்தின்
இளஞ்சூட்டைப் போல
கதகதப்பாயிருக்கிறது
உன் நினைப்பு.
வலி பள்ளத்தாக்குகளில்
அலைந்திருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
பின்னிரவின் அமைதியில்
இதமாய் மிளிர்ந்திடும்
ஒற்றை நட்சத்திரம்
போதுமானதாயிருக்கிறது.
உன் ஒளிப்புன்னகை
சிதறல்களில் ஏதேனுமொரு
சிறு சில்லை
தேடிக்கொண்டிருக்கும் எனக்கு.
.~.~.~.~.~.~.~.~
புல் அறுபட்ட வெளியின்மேல்
சுகமாய் பெய்திடும்
குளிர்ந்த மழை போல
உயிர் விளைய செய்கிறது
உன் வார்த்தைகள்.
நினைவறுந்த பொழுதில்
சரிந்துகிடக்கும் எனக்குள்.
.~.~.~.~.~.~.~.~
~.~. ஜெ.சி. நித்யா ~.~
Posted by
JC Nithya
Saturday, October 17, 2009

ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்
வரியாக முளைத்திடாத கவிதையாய்
துளியாக விழுந்திடாத மழையாய்
நெருப்பாக எரித்திடாத கனலாய்சதா சர்வ காலமும் என்னுள்
சுழன்று கொண்டிருக்கிறாய்
உருவமில்லா இசைத்தட்டில்
நித்திய ராகமாய்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, October 10, 2009
ஆழ் மனவெளிகளில் என்றென்றுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது இந்த தவிப்பு.
இன்னமும் எழுதிடவில்லையே
உனக்கான ஒரு கவிதையை.
எதை பகிர்ந்திட கவிதையில்...
உணர்வின் சிறு அசைவும் புரிகின்ற தொலைவில்
நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசிநேகிதத்தோடு
வார்த்தைகளால் பேசுதலும் வேடிக்கைதானென
பரிகசிக்கிறது என் பேனா...
பிரியங்களை பதிவிட எண்ணுகையில்,
உயிர் கசியும் இந்த பவித்திர துளிகளை விடவா
சொற்குவியல் பெரிது நேசத்தை சொல்லிட?
சினந்து கொள்கிறது விழித்திரையை
முட்டிநிற்கும் கண்ணீர்...
நின் இனிமைகளையேனும் எழுதிட நினைக்கையில்,
ஆழப் பெருங்கடலை அள்ளி எடுத்து
சிறு சிப்பிக்குள் ஊற்றிட நினைக்கும்
குழந்தையின் பேதைமை என்றே
நகைக்கிறது என் நெஞ்சம்..
எனை ஆட்கொண்ட என் தெய்வமே,
உனக்கான ஒரு கவிதையை
எழுதிடும் இந்த வாஞ்சை மட்டும்
தினம் தினம் பெருகி
வழிந்தோடி கொண்டுதானிருக்கிறது
என் நாட்களின் நிமிஷங்கள்தோறும்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, May 30, 2009
இதோ வந்திருக்கிறேன்
பலியிட.
இன்று இல்லையேல்
என்றும் இல்லை.
உயிர் கரைய நேசித்திடும்
விழி விரிய இரசித்திடும்
என் செல்வப் புதல்வனை
நான் நினைத்து நினைத்து
பெருமிதப்படும் ஒரேயோர் காரணத்தை
வெகுநாட்கள் கனவாகவே இருந்து
நனவானதொரு அற்புதத்தை
களங்கமில்லா நேசம் ஊற்றி வளர்த்த
உயிர் பந்தத்தை
பெற்ற வரங்களிலேயே விலைமதிப்பற்ற
என் ஜீவ பொக்கிஷத்தை
இதோ வைக்கிறேன்
பலிபீடத்தில்.
வேண்டாம் - என
இப்போதும் சொல்ல முடியவில்லை.
என்றாலும் இதோ
கீழிறக்கி வைக்கிறேன்.
கடைசியாய்
ஒருமுறை பார்த்துக் கொள்ளட்டுமா?
நேசிக்கிறேனென
ஒருமுறை சொல்லிக் கொள்ளட்டுமா?
வலித்திடுமே
மன்னிப்பு கேட்டுக் கொள்ளட்டுமா?
வேண்டாம்.
ஏதும் செய்வதற்கில்லை.
இதோ தருகிறேன்
முற்றிலுமாக.
தந்தது நீ தானே
எடுத்துக் கொள்ள
எல்லா உரிமையும் உண்டு.
கனவை நனவாக்கியது
நீ தானே
நனவை நினைவாக்க
உரிமை உண்டு.
முழுவதும் சம்மதம்.
உயிரானவரே,
உம்மை விட
உயிருக்கு நெருக்கமானதென்று
வேறேதுமில்லை.
இருந்திடவும் வேண்டாம்.
வலியுடன்,
ஆபிரகாம்.
~.~. JC நித்யா ~.~.