Posted by
JC Nithya
Saturday, October 17, 2009

ஒலியாக வெளிப்படாத சங்கீதமாய்
வரியாக முளைத்திடாத கவிதையாய்
துளியாக விழுந்திடாத மழையாய்
நெருப்பாக எரித்திடாத கனலாய்சதா சர்வ காலமும் என்னுள்
சுழன்று கொண்டிருக்கிறாய்
உருவமில்லா இசைத்தட்டில்
நித்திய ராகமாய்...
~.~. JC நித்யா ~.~.
Posted by
JC Nithya
Saturday, October 10, 2009
ஆழ் மனவெளிகளில் என்றென்றுமாய்
அலைந்து கொண்டிருக்கிறது இந்த தவிப்பு.
இன்னமும் எழுதிடவில்லையே
உனக்கான ஒரு கவிதையை.
எதை பகிர்ந்திட கவிதையில்...
உணர்வின் சிறு அசைவும் புரிகின்ற தொலைவில்
நரம்புகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜீவசிநேகிதத்தோடு
வார்த்தைகளால் பேசுதலும் வேடிக்கைதானென
பரிகசிக்கிறது என் பேனா...
பிரியங்களை பதிவிட எண்ணுகையில்,
உயிர் கசியும் இந்த பவித்திர துளிகளை விடவா
சொற்குவியல் பெரிது நேசத்தை சொல்லிட?
சினந்து கொள்கிறது விழித்திரையை
முட்டிநிற்கும் கண்ணீர்...
நின் இனிமைகளையேனும் எழுதிட நினைக்கையில்,
ஆழப் பெருங்கடலை அள்ளி எடுத்து
சிறு சிப்பிக்குள் ஊற்றிட நினைக்கும்
குழந்தையின் பேதைமை என்றே
நகைக்கிறது என் நெஞ்சம்..
எனை ஆட்கொண்ட என் தெய்வமே,
உனக்கான ஒரு கவிதையை
எழுதிடும் இந்த வாஞ்சை மட்டும்
தினம் தினம் பெருகி
வழிந்தோடி கொண்டுதானிருக்கிறது
என் நாட்களின் நிமிஷங்கள்தோறும்...
~.~. JC நித்யா ~.~.