
எப்படி முடிந்தது
விரிந்து பரந்த பிரம்மாண்டம் சுருக்கி
சிறு கருவறைக்குள்
சூல் கொள்ள...
எப்படி முடிந்தது
அகிலம் ஆளும்
அரியணை துறந்து
மாட்டுத் தொழுவத்தில்
சிசுவென தவழ...
எப்படி முடிந்தது
சதாகாலமும் புகழ்பாடிடும்
தேவதூதர்களை விட்டு
காயப்படுத்தி களிப்படையும்
மனிதர்களோடு வாழ்க்கை செலவழிக்க...
எப்படி முடிந்தது
கூப்பிடும் காக்கை குஞ்சுக்கும்
உணவூட்டும் நிலைகடந்து
தானே பசியின் கொடுமைதனை
உணரத் துணிய...
எப்படி முடிந்தது
பிரகாசமும் மகிழ்ச்சியுமான
உலகம் பிரிந்து
ஏழ்மையின் வலி,
தாய்மையின் பரிவு,
சோதனையில் துணிவு,
நட்பின் இதம்,
நிராகரிப்பின் வேதனை,
புரிதலுக்கான ஏக்கம்,
குழந்தைகளுக்கான ப்ரியம்,
மரணம் தரும் சோகம்,
துன்பத்தில் உழல்பவர் கண்டு
உருகும் இதயம்,
தன்னுடையவற்காக பிரார்த்திக்கும் மனம்
என துளித்துளியாய்
மனித வாழ்வினை ருசித்து பார்க்க...
எப்படி முடிந்தது
எந்த தகுதியுமற்ற
எங்களை வாழ வைக்க
விலைமதிப்பற்ற நின் உயிரை
ஊற்றிக் கொடுப்பதற்கு...
எப்படி முடிந்தது என் இறைவா
இத்தனை அதிகமாய்
இத்தனை அதிகமாய்
எங்களை நேசிப்பதற்கு...
~.~. JC நித்யா ~.~.