Posted by
JC Nithya
Saturday, December 17, 2011
சாக நினைக்கையில்
உயிராய் தெரிகிறாய்.
எப்படி முற்றுப்புள்ளியிடுவதென
தயங்கி
மீண்டும்
வாழ முயல்கையில்
கனவாய் மறைகிறாய்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, December 12, 2011
வளர்ந்து விட்டதனால்
நகர்ந்து வேறிடம் சென்றிட
உன்மேல் ஊன்றி நிற்பவை
கால்கள் அல்ல
என் வேர்கள்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
காற்றில் கிழிபடுவதற்கென்றே
விரிந்திருக்கும்
வாழை இலை போல
உன் நினைவுகளில் அலைபடுவதற்கென்றே
தவித்திருக்கும்
நெஞ்சம்..
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, November 14, 2011
19B குளிர்சாதனப் பேருந்து.
அலுவலக களைப்பு.
புன்னகை மறந்த முகங்கள்.
அநேகமாக அனைத்து பயணிகளும் மென்பொருள் வல்லுநர்கள்..
மௌனமே நாகரீகமென அமர்ந்திருக்கும் ஒரு மாலைப்பொழுது.
ஒரு நிறுத்தத்தில் சட்டென மூன்று சிட்டுக்குருவிகள் உள்ளே நுழைந்தது போல, "ஐய் ..ஏசி பஸ்டா..." என்றொரு சத்தம், ஒவ்வொரு இருக்கையாய் சென்று, தொட்டு தடவிப் பார்த்த அந்த பிஞ்சு முகங்களில் அத்தனை மகிழ்ச்சி.. "இங்க பாருடி...ஸீட் பெல்ட்...." "விழாம இருக்கிறதுக்கு...."
"அம்மா...எனக்கு சாக்லேட் வேண்டாமா... ஏசி பஸ்-ல கூட்டிட்டு வந்தியே இதே போதும்."
ஒரு சிறுவன் ஓடிச்சென்று நடத்துநரிடம் "தி.நகர் வர இன்னும் எவ்ளோ நேரம் ஆகும் அங்கிள்?" எனக் கேட்க, சட்டென சிரித்த அவரோ "இன்னும் மூணு நாள் ஆகும்ப்பா" என்று சொல்ல...உடனே மூவரும் சேர்ந்து கைதட்ட...அமர்களப்பட்டது பேருந்து.
ஒரு உற்சாக தூறல் அத்தனை பேரையும் நனைக்க, அழகானது அன்றைய தினம் அந்த சின்னஞ்சிறு பூக்களால்...
~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ .
வெயில் வழிந்தோடும் பேருந்தில்
மனம் வறண்டதொரு பொழுதில் இலக்கற்று வெறித்து கொண்டிருக்கையில் திடீரென ஒரு பிஞ்சுவிரல் என்மீது பட சட்டென்று திரும்பினேன்.
"அக்கா...என் பேரு அஃப்சல்...நான் 2-ம் வகுப்பு 'பி' செக் ஷன்-ல படிக்கிறேன். நீங்க என்ன படிக்கிறீங்க அக்கா?"... ஆயிரம் நட்சத்திரங்களை கூட்டி பிழிந்த அந்த கண்கள் பார்த்து திகைத்த என்னிடம் பதில் எதிர்பாராமல் "வரேன் க்கா..டாட்டா" என சொல்லிவிட்டு ஓடிப் போய் இறங்கி விட்டாய்
அஃப்சல்....ஏன் பேசினாய்? பல வருட பழக்கம் போல் எதற்கு சிரித்தாய்?
மனம் முழுக்க நனைத்து விட்ட மழையை எப்படி ஒரு நொடியில் பொழியச் செய்தாய்?
அந்த நாளுக்கான எனது தேவை உனது சத்திய புன்னகை தானென்பது உனக்கெப்படி தெரியும்?
...
இன்றும் சைதாப்பேட்டை பேருந்து நிலையம் கடக்கும் போதெல்லாம் "அக்கா...எப்படி இருக்கீங்க" எனக்கேட்டுக்கொண்டு நீ வந்துவிட மாட்டாயா என்று தான் தேடுகிறேன் என் குட்டி மழைத்தூதனே...
~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ . ~ .
ஒவ்வொரு பயணமும் ஒரு அழகிய அனுபவம்...இந்த சின்னஞ் சிறிய நட்சத்திரங்களால். வாழ்வது எப்படி என்று குழந்தைகள் கற்றுத் தருகிறார்கள். மிக சுலபமாய்...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Wednesday, October 19, 2011
நிலவென்பது...
உன்னைப் பற்றியதான
கனவுகளின் துவக்கப்புள்ளி.
உன் நினைவுதரும் குளிர்மைக்கு
ஒளிரும் சாட்சி.
எல்லையின்றி பொங்கிப் பெருகும்
உன் அன்பின் ஒளி விளக்கம்.
உன்முகம் தேடியலையும்
பார்வைகளுக்கு நிரந்தர உறைவிடம்.
சுவாசிக்க மறந்த நொடிகளின்
கூட்டுத் தோற்றம்.
என்றோ உதிர்த்த புன்னகையின்
உயிர் வடிவம்.
ஆழமான உண்மையாய்
சுடரும் அதிசயம்.
இமைக்காமல் பார்க்கத் தூண்டும்
பிரம்மாண்டம்.
என் வானில்
என்றும் மறையாத
நித்திய வெளிச்சம்...
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Tuesday, September 13, 2011
இந்த நொடி
இந்த புள்ளியில்
..
வேறேதுமில்லை
என்னிடம்
..
நின்னைத் தவிர.
ஆனால்
நீ போதும்.
..
வாழ்வதற்கு.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.
Posted by
JC Nithya
Monday, August 15, 2011
நிறமிழந்து உருவழிந்து
சருகென உதிர்ந்த பின்னும்
மீதமிருக்கும்
இலையோர பச்சை போல
ஓரழகாய் உறைந்திருக்கிறாய்
என் உயிரின் நுனியில்.
~.~. ஜெ.சி. நித்யா ~.~.