ஒளி நட்சத்திரம்

 














இருளின் தனிமையில் தான்
ஓரு ஒளி நட்சத்திரத்தின்
தேவை உணரப்படுகிறது.

எல்லாமும் பெற்று
செயற்கை ஒளிகளில் மயங்கித்
திரியும்போது
புரியாத
நின் நட்சத்திரத்தின் மேன்மை
இப்பொது புரிகிறது.

மனிதர் எதிர்பார்க்காத
எளிய சூழ்நிலையில்
ராஜாதி ராஜனின்
பிறப்பு நிகழ்ந்ததை
இன்னமும் பலரால்
ஜீரணிக்க முடியவில்லை.

சமூகத்தின் அடிமட்டத்திற்கும் கீழ் சென்று
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது
முழு உலகுக்கான மீட்பு
என்று சொல்லாமல் சொன்ன
உன் கம்பீரம்
மெய்சிலிர்க்க செய்கிறது.

நின் போல் பிறந்தவர் எவரும் இல்லை.
நின் போல் வாழ்ந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் இறந்தவரும் எவரும் இல்லை.
நின் போல் உயிர்த்தெழுந்து வாழ்பவரும் எவரும் இல்லை.

நீ பிறந்த இந்த பொன்நாளில்
இருளில் இருப்பவர்களுக்கு ஒளி பிரகாசிக்கட்டும்.
வறியவர்களின் நம்பிக்கை துளிர் விடட்டும்.
வலிமை அற்றவர்கள் வாழும் சக்தியை பெறட்டும்.
உலகத்தின் தீமைகள் வழுவிழக்கட்டும்.
போலி பகட்டுக்கள் ஒழிந்தோயட்டும்.
அன்பு ஒன்றே ஆதராமாக உலகம் அறியட்டும்.

நீ பிறந்ததினால் தான் உலகம்
இன்னும் நிலைத்திருக்கிறது.
நின் வாழ்வு தான்
எங்களை வாழ வைக்கிறது.

இனிய கிறிஸ்து பிறப்பு வாழ்த்துக்கள்!


~.~. ஜெ. சி. நித்யா~.~.

நேசம்





















வாழ வைப்பாய் என நேசிக்கவில்லை.
வாழ்தலே நீதானென நேசித்தேன்.

வலி தீர்ப்பாய் என நேசிக்கவில்லை
வலிமையே நீதானென நேசித்தேன்.

யாருமற்றதினால் நேசிக்கவில்லை
சகலமும் நீதானென நேசித்தேன்.

உடன் வருவாய் என நேசிக்கவில்லை
உயிரே நீதானென நேசித்தேன்.

நரகத் தீக்கு தப்புவிப்பாயென நேசிக்கவில்லை
மோட்சமே நீதானென நேசித்தேன்.

இவ்வுலகில்
நேசமெனப்படுவது எதுவும்
நிசமில்லை.
உனையன்றி நேசமென்று
ஏதுமில்லை.

~.~. ஜெ. சி. நித்யா.~.~.


திசைகாட்டி

 












திக்குத் தெரியாத காட்டில் 
திகைத்து நிற்கும் போது  மட்டுமல்ல.

தினசரி வாழ்க்கையின்
சின்னஞ் சிறிய முடிவுகளுக்கும்
திணறி தவிக்கையில்
திசை காட்டும் வெளிச்சமாய்
நின் வார்த்தை
மனதை நிறைக்கிறது.

அகிலத்தையும் படைத்த
அதே வார்த்தை தான்
இந்த சிறியவளுக்காகவும்
இறங்கி வருகிறது.
இப்படி வாழ்தல் எத்தனை
பெரும்பாக்கியம்!

தேனாய் தித்திக்கும் 
அதே வார்த்தைதான்
திடப்படுத்தி திரும்ப எழுந்து 
நிற்கவும் செய்கிறது.
இதுவன்றி  வேறெது பேரின்பம்!

~. ~. ஜெ.சி. நித்யா.~.~


மூடியற்ற முகம்

 













எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது 
ஊருக்கு காண்பிக்க...

அழகாய் அலங்கரிக்கப்பட்ட பொழுதில்... 
சூரிய வெளிச்சத்தில் இயற்கை பின்னணியில்.
அந்நிய மண்ணில் அடையாளம் இழக்காமல்... 
நண்பர்களோடு விளையாடினபோது...
 கனவு கண்ட பணியிடத்தில்... 
உயிருக்குயிராய் நேசிக்கும் நபரோடு... 
ஒரு நாய்குட்டியோடு அல்லது ஒரு பறவையோடு 
எல்லா செல்வத்திலும் மேலான குழந்தைகளோடு...

சற்று மெருகேற்றி...சற்று ஒளி கூட்டி...
அழகாய் பகிர எல்லாருக்கும் ஒரு முகம் இருக்கிறது... 

அவள் இன்னமும் தேடுகிறாள்.
தனது முகங்களின் குவியலுக்குள்.
மாசற்ற அன்பினால் நிறைந்து 
மனமகிழ்ந்து சிரித்த பொழுதொன்றின் முகத்தை...

~.~. ஜெ.சி. நித்யா ~.~.
25 May 2024.


ஏன்?

 


















ஏதுமில்லை.

எல்லாம் அற்று அகன்று
தனித்திருக்கிறேன்.

எதைக் கொண்டாடுவது?
இத்தனை வருஷங்கள் வாழ்ந்ததையா
இன்னும் எத்தனை நாட்கள்                                    
என்று கூட தெரியா                    
இந்நிலையையா

எதற்கு இத்தனை தூரம் வந்தேன்
தெரியாது.
ஏனிருக்கிறேன் இன்னும்
தெரியாது.

யாருக்காக வாழ்வது
கையில் எதுவுமில்லை.
வெறுமையாய் நிற்கிறேன்.
வாழ்வின் விளிம்பில்.

இருதயத்தின் சதையை
பிய்த்தெடுப்பது போல்
தாள முடியா வலி.

எனக்கான வெளிச்சம் எங்குமில்லை.
எனக்கான நேசம் எங்குமில்லை.
நொறுங்கி இருக்கிறேன்.
முற்றிலுமாய்.


என் தேவனே என் தேவனே                                        
எனக்கான நின் பாதை 
இங்கிருந்து தான் தொடங்குகிறதா?

எல்லாவற்றையும் இழந்த பின் தான்
என் சிலுவை எது என்ற புரிதல் வருமா?

உனையன்றி உறவேதுமில்லை.
நீயின்றி வாழ்வேயில்லை.

வேறெங்கு செல்வேன்?
ஜீவனே நீயாக இருக்கையில்.

முடிவின் புள்ளியில்
குவிந்திருக்கிறது 
துவக்கத்தின் ஊற்று.


Nithya JC.
15 May 2024.

Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.