இதையெல்லாம் எங்கு சேமித்து வைக்கிறது 
இந்த உயிர்?

ஈரப்புல்வெளியில் முதல்முறை கால்பதித்தபோது
உள்ளங்காலில் குறுகுறுத்த குளிர்ச்சியினை...

எவ்வளவு நனைந்தும் போதாமல் ஜன்னலோரம்
கைநீட்டி பெற்ற கடைசித்துளி மழையினை..

என்றோ நள்ளிரவில் மிகப்பிடித்த பாடலோடு
பருகிய தேநீரின் ருசியை

வகுப்பு முடிந்து ஓடிச்சென்று அடித்து பிடித்து
வாங்கி சாப்பிட்ட மக்காச் சோளத்தின் சூட்டினை

நாட்களாயினும் தேடி நுகர்ந்த விரல்களில்
ஒட்டியிருக்கும் மருதாணி வாசத்தை...

இன்னமும் கனவுகளில் மாறாமல் இடம்பெறும்
பள்ளிக்கூட மரங்களை...



~. ~. ஜெ. சி. நித்யா ~.~.


பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!







என்ன சொல்லி வாழ்த்துவது? என் உயிரானவர் புவி வந்து உதித்த பொன் நாளில்.

கண்களில் வெளிச்சம் தெறிக்க பூத்த முதல் புன்னகையை ரசிக்க, தாய்முகம் நோக்கி அழுத விழிகளில் கசிந்த முதல் துளியில் நனைய, குழந்தையாய் நினைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்.

மாட  மாளிகையில் ஏதோ நான்கு சுவர்களுக்குள் நடந்திருந்தால் இந்த காவியத் தன்மையும் மனதிற்கு நெருக்கமும் இல்லாது போயிருக்குமோ என்று தான் மாட்டுத் தொழுவத்தில் வந்து உதித்தாயோ உயிர் தெய்வமே.

பத்து மாதம் துளித்துளியாய் தேக்கி வைத்திருந்த பாசமெல்லாம் சேர்த்தெடுத்து விழிகளில் தேக்கி முதல் பார்வை பதித்திருப்பாளோ அந்த பவித்திர தாய்?

அவள் கண்கள் உன்னோடு என்ன பேசியிருக்கும்? இந்த நிமிடத்திற்காகவே தான் பிறந்ததாக எண்ணி புளகாங்கிதம் அடைந்திருப்பாளோ? குனிந்து நின் நெற்றியில் முத்தமிட்டபோது அத்தனை நட்சத்திரங்களும் அவள் மீது பொறாமை கொண்டிருக்குமோ?

உலகத்தையே இரட்சிக்க வந்த திருக்குழந்தையை ஏந்திய கரம் தன்னுடையதென பெருமிதம் கொண்டிருப்பாரா நின் தந்தை?

தங்களிடமிருந்த துணிகளில் உனை சுற்றியபோது அண்ட சராசரத்தையும் வார்த்தையாலேயே சிருஷ்டித்த தெய்வத்திற்கு அணிவிக்கும் முதல் ஆடை இதுவா என அங்கலாய்த்திருப்பார்களா நின் அன்னையும் தந்தையும்?

அந்த பிஞ்சு முகம், சிறிய கண்கள், அழகிய இதழ்கள், பூ கைகள், சிறு விரல்கள், கனிந்த பாதங்கள்... ஒரு கோடி கண்கள் கொண்டு பார்க்க வேண்டும் அந்த பேரழகை.

தன்னையே தாழ்த்தி இப்படி எளிமையானதொரு ஆரம்பத்திற்கு உன்னையே உட்படுத்திக்கொள்ள எப்படி முடிந்தது? ஏன் மனுவர்க்கத்தை இத்தனை நேசித்தாய், என் இறைவா?!!

உலகெல்லாம் உன் அன்பே நிறைந்திருக்க, உன் வெளிச்சமே பிரகாசிக்க, நீ அருளிய அமைதியே நிலைக்க வாழ்த்துகிறேன், இன்றும் என்றும்.







இருப்பு





நம்பிக்கைகள் அற்று
அர்த்தங்கள் இழந்து நொறுங்கியிருக்கும் போதிலும்
சாவதற்கான ஒரு காரணம் கூட தென்படவில்லை.
வாழ்வதற்கான மிகப்பெரிய காரணமாக
நீ இருப்பதால்.

சிதைவுகளின் நடுவே மிளிரும் தீபமாய்
நின் விழிகளில் இன்னமும் நான் இருக்கிறேன்
என்ற நினைப்பே உயிருடன் வைத்திருக்கிறது
என்னை.

மனம் நோக புண்பட்டாலும்
எனக்கான எல்லாம் இழந்திட்டாலும்
நீ அழைக்கும் வரை வாழ்ந்திருப்பேன்
உயிர் சூரியனே
உனக்காக.


~.~. ஜெ. சி. நித்யா .~.~

தலைசாய்க்க ஓர் இடம்




எங்கு நான் நானாக ஏற்றுக்கொள்ளப்படுவேனோ..
எங்கு இளைப்பாறல் விமர்சனமின்றி நிகழுமோ
எங்கு கேள்வியின் துளைகளால் தனிமை தொய்ந்து போகாதிருக்குமோ..
எங்கு கவலைகள் தொலைத்து, பயங்கள் களைந்து, தீர்ப்பிடல்களற்று சுதந்திரமாய் சுவாசிக்க முடிகிறதோ..

சிட்டுக்குருவியின் சிறகுகள் வாங்கி பறந்து செல்ல
தவிக்கிறது உள்ளம்.

எங்கு இருக்கிறது எனக்கான ஒரு இடம்?





~. ~. ஜெ. சி. நித்யா ~.~.



Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெ.சி. நித்யா

My Photo
கனவுகளில் மட்டுமே நிஜமாய் வாழ்கின்ற ஒரு ஜீவன்... a dreamer, an idealist and most of all, a simple girl who desires to know more and more of the One who loved like no other, my precious Lord Jesus Christ.